ராஜாவுக்கும் அவரது மகளுக்குமான ‘ஈகோ’ போட்டி பற்றிய கதை இது.
ஒரு நாட்டின் வீரத் தளபதிக்கும், அழகு இளவரசிக்கும் இடையே காதல் மலர்கிறது. இது ராஜாவின் காதுக்குப் போகிறது. இவர்களின் காதலை விரும்பாத அரசர்,
தளபதியை ஊரறியக் கொல்ல நினைக்கிறார்.
“இந்தக் காதலில் தளபதி மட்டும் குற்றவாளி இல்லையே… உங்கள் மகளும்தானே அவனைக் காதலித்திருக்கிறார். அதற்காக இளவரசியையும் கொல்லவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், இதனை மனதிற்கொண்டு, தளபதிக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்…” என்று அரசரிடம் பணிவுடன் சொல்கிறார் மதியூக மந்திரி. அமைச்சர் சொல்வதும் சரிதான் என்று முடிவுக்கு வரும் அரசர், சமமான வாய்ப்பு தர முடிவெடுத்து, காற்றுக் கூட புக முடியாத ஒரு உறுதியான கூண்டைத் தயாரிக்கச் சொல்கிறார்.
சம்பவத்தை நிகழ்த்தும் மைதானத்துக்கு ஊர் மக்களை வரவழைத்து, தளபதியைக் கைவிலங்கிட்டுக் கொண்டு வருகின்றனர், சேவகர்கள்.
ராஜா அறிவிக்கிறார்… “இம்மைதானத்தில் இரு கூண்டுகள் உள்ளன. ஒன்றில், பலநாள் பசியோடு காத்திருக்கும் முரட்டுச் சிங்கம். இன்னொன்றில், என் அன்பு மகள். நீ எந்தக் கூண்டைத் திறக்கிறாயோ, அதன்படி உன் வாழ்க்கை அமையும்!” என்கிறார். இரு கூண்டுக்கும் இடையே இடமும் வலமுமாகப் பார்வையைச் சுழலவிடுகிறான் தளபதி. மக்களிடம் ஆழ்ந்த அமைதி. படபடக்கும் இதயத்தோடு அனைவரும் காத்திருக்கின்றனர்.
“காதலைக் கைவிட்டு, ஊரை விட்டு ஓடிவிடுகிறாயா..?” என்கிறார் ராஜா.
தன் மறுப்பை பலமான தலையசைப்பில் தெரிவித்த தளபதி, இரு கூண்டுகளையும் அடுத்தடுத்து பார்த்தபின், ஒரு முடிவோடு இடதுபுறம் இருந்த கூண்டை நோக்கிப் பயணித்தான். மக்கள், என்ன நடக்குமோ…? என்ற அச்சத்துடன் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கூண்டின் கதவைத் திறந்தான் தளபதி. உள்ளே…
கதை இந்த இடத்தில் முடிகிறது. கதையின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன.?
எத்தகையை சிக்கலான சூழலிலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது. நெருக்கடியை விரும்பி ஏற்றுக்கொண்டு, அதனை எதிர்கொள்ளப் பழகுவோரே வெற்றியாளராக முடியும்.
ஆற்றின் போக்கில் சருகாகும் இலைக்கும், வாழ்க்கையின் பாதையில் பயணிக்கும் மனிதனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தன் போக்கில் வாழ்க்கையை நகர்த்த, சவால் விரும்பிகள் எப்போதுமே தயாராக இருப்பதில்லை.
“அலுவலகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை சார்… ஜாலியாக இருக்கிறேன்… சந்தோஷமாக நகர்கிறது வாழ்க்கை!” என்று கூறும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.
“சார், லைஃப் ரொம்ப ஸ்மூத்தாப் போகுது. ஆனா, இப்படியே சொகுசா இருந்து பழகிட்டா, பின்னால பெரிய சிக்கல்ல மாட்டிக்குவோமான்னு பயமா இருக்கு. எப்பவெல்லாம், ஆஃபீஸ்ல பிரச்னை இல்லாம எல்லாமே என் விருப்பப்படி நடக்குதோ, அப்பல்லாம், என் வளர்ச்சி தடைபடுதுன்னு உணர்றேன்..” என்று கூறும் நண்பரையும் பார்த்திருக்கிறேன்.
சவால் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது என்று கூறும் நண்பரின் வெற்றி கிராஃப் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. இன்று தனது வேலையை உதறிவிட்டு, தனி நிறுவனம் தொடங்கி, ஒரே ஆண்டின் முடிவில் மூன்று வகைத் தொழில்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர். முன்பு எட்டு மணி நேரமாக இருந்த தனது பணிநேரத்தை, இன்று பதினாறு மணிநேரமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முன்பைவிட, முகம் மலர்ச்சியாக இருக்கிறது. “பிஸியா போகுது சார்!” என்று ஆனந்த அலுப்போடு சொல்கிறார்.
இதுதான் உண்மை நண்பர்களே. நெருக்கடியை, சவால்களை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும்.
– இராம்குமார் சிங்காரம்,