ஒருவன், வாழ்க்கையில் தனக்கு மட்டும் வெற்றி கிடைப்பதில்லையே என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அவன் புலம்பலைக் கேட்ட ஒரு பெரியவர்,
அந்த ஊரில் இருக்கும் ஒரு ஞானியைச் சென்று பார்க்கச் சொன்னார். அவனும் ஞானியிடம் சென்றான்.
அவனது பிரச்சனையைக் கேட்ட ஞானி, மறுநாள் காலையில் அந்த ஊருக்கு அருகில் இருக்கும் மலை உச்சிக்கு வரச் சொன்னார். அந்த மலை உச்சியைச் சுற்றிலும் ஏழு மலைகள் இருந்தன.
அந்த மலைகளுக்கு நடுவில் நின்று கொண்டு அவனை ‘நான் தோற்றவன்‘ என்று உரக்கக் கத்தச் சொன்னார். அந்த வார்த்தையானது மலைகளில் பட்டு ஏழு முறை எதிரொலித்தது.
பிறகு அந்த ஞானி, ‘நான் வெற்றி பெறப் பிறந்தவன்‘ என்று சுத்தச் சொன்னார். அவனும் அதேமாதிரி கத்த, திரும்பவும் ஏழு முறை எதிரொலித்தது.
இப்போது ஞானி சொன்னார், “புரிந்து கொள்! நீ எப்படி உன்னை உலகிற்கு வெளிப்படுத்துகிறாயோ, அப்படித்தான் உலகமும் உன்னை பார்க்கிறது. நீ தோல்வியாளனாக வெளிப்படுத்தினால், உலகம் தோல்வியாளனாகவே பார்க்கும். நீ வெற்றி பெறப் பிறந்தவன் என்று சொன்னால் உலகமும் உன்னை அப்படியே பார்க்கும். எனவே, மாற்றம் என்பது உள்ளிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்” என்றார்.
ஆம்! தம்முடைய திறமைகளை ரகசியமாக வைத்துகொண்டு உலகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புலம்பாமல், முயற்சி செய்து, வாய்ப்புகளைத் தேடிப் பெற்று முன்னேற வேண்டும்.
இந்த உத்தியைப் புரிந்து கொண்டதால்தான், வெற்றியாளர்கள் புலம்புவதேயில்லை.
————– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil