சென்னையில் இருந்து மதுரைக்குக் கிளம்பிய ஒருவன், எதிரில் ஒரு பெரியவரைச் சந்தித்து வழி கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே வாயைக் காண்பித்து, “மதுரைக்கு வழி வாயில” என்றார்.
அதாவது, ‘என்னிடம் வாய் திறந்து கேட்ட மாதிரி, பிறரிடமும் கேட்டு வழியைத் தெரிந்துகொள்’ என்பதுதான் இதன் அர்த்தம்.
ஆம்! 450 கி.மீ.க்கும் ஒருவர் வழி சொல்வதென்பது சாத்தியமற்றதுதான். அதையும் மீறி இலக்கை அடைய வேண்டுமானால், நீங்கள் வாய் திறந்து கேட்க வேண்டும். அப்படியானால், தயக்கம், கூச்சம், வெட்கம், அவமானம் – இவை நான்கும் வெற்றியாளர்களுக்கு இருக்கவே கூடாது.
‘அழுகிற பிள்ளைக்குத்தான் பால்’ என்பது பழமொழி. அதுபோல, வாய்விட்டுப் பேசினால்தான், நமக்கு என்ன தேவை என்பது பிறருக்குப் புரியும்; அல்லது நம்மால் என்ன முடியும் என்பது அடுத்தவருக்குத் தெரியும்.
சிலர், ‘நான் பிறரோடு பேசக் கூச்சப்படுபவன்’ என்ற ரகமாக இருப்பார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
‘நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறபோது, எதிராளி முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்ன ஆகும்?’
‘அவர் பதில் சொல்லவில்லை என்றால், நமக்கு என்னவோ போன்று இருக்குமே?’
‘அவர் முகம் கொடுத்துப் பேசவில்லையென்றால், நமக்கு ‘சப்’ என்று ஆகிவிடுமே?’
‘எதையோ எதிர்பார்த்து பேசுவதாக அவர் நினைத்தால் நம் மதிப்பு என்ன ஆவது?’
– இப்படிப்பட்ட தயக்கங்கள் அவர்களது மனதில் ஓடுவதால்தான், அவர்கள் தெரியாத மனிதர்களிடம் வலியச் சென்று அறிமுகப்படுத்திக் கொள்வதில்லை.
ஆனால், நீங்கள் சாதிக்கப் பிறந்தவராக இருந்தால்,ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நம் கலாச்சாரப்படி, புதிய மனிதரிடம் யாரும் எடுத்தெறிந்து பேசுவதில்லை; கோபப்படுவதில்லை; சண்டை போடுவதில்லை. எனவே, தைரியமாக உங்களை நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இவற்றையும் மீறி, ஒருவேளை அவர் உங்களை மதிக்கவில்லை என்றால், அது அவருக்கு வேறு ஏதோ பிரச்சனை இருப்பதைத்தான் காட்டுகிறது. அதைப் பற்றி அவர்தான் கவலைப்பட வேண்டும். நீங்கள் அல்ல….
உங்கள் கூச்ச சுபாவத்தைப் போக்க, ஒரு எளிய பயிற்சி! நாள்தோறும் நீங்கள் இரண்டே இரண்டு புதிய மனிதர்களைச் சந்தித்து உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் விசிட்டிங் கார்டை மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்படி உங்கள் விசிட்டிங் கார்டுகளை எத்தனை பேரிடம் பகிர்ந்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்களும், உங்கள் நிறுவனமும் பரிச்சயமாவீர்கள்.
மறந்துவிடாதீர்கள், விசிட்டிங் கார்டில் உங்கள் போட்டோவும் இடம் பெறட்டும். அப்போதுதான் உங்கள் முகம் அவர்களது நினைவில் இருக்கும்.
சரி… அறிமுகப்படுத்திக் கொண்டால் மட்டும் போதுமா?
இல்லை !
அந்தத் தொடர்பு உங்களுடைய இலக்கை அடைய உதவுமானால், ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் என அவரோடு தொடர்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சிலர் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது அடக்கியே வாசிப்பார்கள். அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி உயர்வாகச் சொல்லத் தேவையில்லை என்றாலும்கூட, உள்ளதைச் சற்று அழகாகச் சொல்லலாம்.
‘நான் இந்தத் துறையில் 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றவன்’; ‘என் நிறுவனத்தில் 60 பேர் பணியாற்றுகிறார்கள்’; ’32 வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர்’ என உங்களைப் பற்றி நீங்களே பெருமிதமாக எண்ணக்கூடிய சில விஷயங்களைச் சொல்லி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
தயக்கம், கூச்சம், வெட்கம், அவமானம் – இவை நான்குமே நீங்களே உங்களுக்கு உருவாக்கிக் கொள்கிற தடைக்கற்கள். எந்த எதிரியும் வெளியிலிருந்து இதை உங்களுக்குள் ஏற்படுத்த முடியாது.
இவற்றை நெகட்டிவாகப் பார்க்காமல், பாசிட்டிவாகப் பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமானால் நூறு கதவுகளையாவது தட்ட வேண்டும்; ஆயிரம் மனிதர்களையாவது பார்க்க வேண்டும். எனவே இந்த நான்கு விஷயங்களைத் தவிர்த்தால்தான் முன்னேற முடியும்.
“சார் தயக்கமே பார்க்கமாட்டார் தெரியுமா?”
“அவர் கூச்சப்படாத டைப்”
“சார் அவமானத்துக்கெல்லாம் அஞ்ச மாட்டார்”
– என இந்த உலகம் இவற்றையெல்லாம் பாசிட்டிவாகத்தான் பார்க்கிறது. ஏன் நீங்கள் மட்டும் இதனை நெகட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
நீங்கள் தற்போது செய்யவேண்டியது என்னவென்றால், இதுவரை எதிர்கொண்ட மிகப் பெரிய அவமானங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றையெல்லாம் பாசிட்டிவாகப் பார்க்க முடியுமா என்று சிந்தயுங்கள். அப்படி சிந்திக்க முடியுமானால், நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.