fbpx
அவசர அரசன் | Hasty King

tamil motivational speaker
  • August 21, 2023

ஒரு அரசன், சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான் அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான். அந்த ஏழை சொன்னான், அரசே உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.”‘யாரிடம் புளுகுகிறாய்..? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது” என்று உரத்த குரலில் கத்தினான். உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது” என்று அவசரமாக மறுத்தான், ஏழை விவசாயி சொன்னான் “சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா, எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.” கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான், மன்னனாக இருந்தாலும், அவனும் மனிதன்தான் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் உள்ளது. ஒரு மன்னனுக்கு சொர்க்கம் நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார் முனிவர். “யார் நீர்?” என்று கேட்டார். “நான் மன்னன்..”

‘சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?

“நான் ஒரு நாட்டுக்கே மன்னன் என்கிறேன். என்னைப் பார்த்து சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்கிறீரே?” “எனக்கு உன்னைப் பார்த்தால் திருடனைப்போல் தெரிகிறது” என்றார் முனிவர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “முனிவராயிற்றே என்று பொறுமையாக காத்திருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தால் என்னையே திருடன் என்கிறீரா..? உம்மை என்ன செய்கிறேன் பார்!” என்று வாளை உருவினான்  மன்னன். முனிவர் சிரித்துக்கொண்டே, “இதுதான் நரகத்துக்குச் செல்லும் வழி” என்றார். மன்னனுக்கு சட்டென்று ஞானம் தோன்றியது. கேள்வி கேட்காமலே தாம் வந்த நோக்கத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, பதில் சொல்லிய மகாமுனியாக காட்சி தந்தார் முனிவர். வாளை கீழே போட்ட மன்னன், “சுவாமி என்னை வேண்டும்” என்று பணிந்தான். ‘இதுதான் சொர்க்கத்திற்குச் செல்லும் வழி” என்றார் ஞானி. சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் மன்னன். உயர் பதவியில் இருக்கும்போது, எதையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசுவதே சிறப்பானது.

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.