ஒரு பெரிய தொழிலதிபரைப் பார்க்க, “இரவு 7 மணி போல் வரட்டுமா?” என்று கேட்டோம்.
“7 முதல் 7.30 மணி வரை Think Tink நேரம். அதனால் 730 மணிக்குப்பிறகு வாருங்கள்” என்றார்.
‘’அதென்ன Think Tink?’’ என்று ஆச்சரியப்பட்டு கேட்டோம்.
“நாள்தோதும் நீங்கள் சாப்பிடுவதற்கு என்று நேரம் ஒதுக்குகிறீர்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்குகிறீர்கள். தூங்குவதற்கென்று நேரம் ஒதுக்குகிறீர்கள். ஆனால் சிந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்குகிறீர்களா? அதுதான் Think Tink. அதாவது think என்றால் சிந்தனை; Tink என்றால் மணியடிக்கும் சத்தம். நாள்தோறும் குறித்த நேரம் வந்தவுடன் உங்களது இலக்கு பற்றி சிந்தனை செய்ய மனதைப் பழக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். பணக்காரர்கள் இதைத் தொடர்ந்து செய்கிறார்கள்” என்றார்.
நம் மனதைப் பழக்குவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. மனம் என்பது நல்ல சேவகன் மாதிரி. அதை முறையாகப் பழக்கினால், உங்களைப் பணக்காரராக்கி விடும்.
அமெரிக்காவில் குரங்குகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தினந்தோறும் பகல் 12 மணி அடித்தவுடன் அவற்றிற்கு சாப்பாடு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதம் இப்படி உணவு பரிமாறப்பட்டபின், 31 ஆவது நாள் 12 மணி அடித்தவுடன் சாப்பாடு வழங்கப்படவில்லை. எனவே, குரங்குகள் பசி எடுத்து சத்தம் போடத் தொடங்கின.
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதனால் நமக்கும் இது அப்படியே பொருந்தும். நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாழ்வின் இலக்கு குறித்து சிந்திக்கப் பழகினோமேயானால், அந்த நேரம் வந்தவுடன் மனம் தானாகவே சிந்திக்கத் தொடங்கி விடும்.
சிந்தனையானது, நம் இலக்கை அடைவது குறித்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது, நமது அன்றாட வேலைகளைத் திட்டமிடுவதாக இருக்கலாம்… அல்லது, நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுவதாக இருக்கலாம்… அல்லது, அன்றைக்கு சந்திக்கப் போகிறவரிடம் எப்படி பேசுவது என்று ஒத்திகையாக இருக்கலாம்… அல்லது, நமது இலக்கை அடைவதற்கான அடுத்த திட்டம் குறித்து யோசிப்பதாக இருக்கலாம்…இப்படி எதைப் பற்றி வேண்டுமானாலும் சிந்திக்கலாம்.
இந்த நேரத்தை சிலர் ‘திட்டமிடுவதற்கான நேரம்‘ என்றும் சொல்வதுண்டு. இந்த நேரம் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும்.
சிலர் காலையில் எழுந்திருக்கும் முன் படுக்கையில் படுத்தவாறே சிந்திப்பதுண்டு. சிலர் காலையில் ‘வாக்கிங்‘ செல்கிற போது சிந்தித்துக் கொண்டே செல்வர். சிலர் அலுவலகத்திற்கு வந்தவுடன், வேலையை தொடங்குவதற்கு முன் திட்டம்மிடுவர். சிலர் இரவு நேரங்களில் வீட்டிற்குச் செல்வதற்கு முன் சிந்திப்பதுண்டு. இப்படி அவரவரது வசதிக்கேற்ப சிந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கலாம்.
இப்படி திட்டமிடுவதால் என்ன லாபம் தெரியுமா? நாம் கனவு கண்டு கொண்டிருந்த இலக்குகளுக்கு உயிரூட்டம் கொடுக்க இந்தச் சிந்தனை நேரம் பயன்படும்.
ஆம்! வெறும் கனவு மட்டுமே வெற்றியாளர்களை உருவாக்கி விடுவதில்லை. கனவுகளைச் செயல்படுத்த திட்டமிடல் அவசியம். அதற்கு Think Tink பலன் தரும். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இதைச் செய்து பாருங்கள். உங்களது செயல் திறன் எப்படி அதிகரித்துள்ளது என்பதை நீங்களே உணரலாம்.
–ராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu