வேலை பிஸியில் இருந்த நேரம். என் அலுவலகத்துக்கு வந்தார் உற்சாகமான ஒரு நண்பர். நண்பரின் மொபைல் ஒலித்தது. லைனில் இருக்கிறாரா,
இல்லையா என்றே கண்டுபிடிக்க முடியாதபடி, எதிர்முனைப் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தபடி சில நிமிடங்கள் மிக அமைதியாக இருந்தார்.
சோளப் பொறி போடப்பட்ட பாப்கார்ன் மெஷின் ஐந்தாவது நிமிடம் ‘பட’, ‘பட’வென பொறிகிற மாதிரி பேச ஆரம்பித்தார் நண்பர்.
“பாஸு! உனக்கு 35 வயசு ஆயிடுச்சு. சட்டு புட்டுன்னு ஒரு முடிவை எடு. உன் கம்பெனியிலே இன்னைக்குத் தர்ற 40 ஆயிரம் ரூபா இனிப்பா இருக்கும். இன்னும் 10 வருஷம் கழிச்சு அது 60 ஆயிரமா மாறிடும்னு நீ கணக்குப் போடுவே! ஆனா, வரலாறு என்ன சொல்லுது தெரியுமா…? 40– வது வயசிலே சம்பளம் தேய்மானத்திலே போகுதுன்னு புள்ளிவிவரம் இருக்கு.
உன் இரத்தம் சுண்டிடும். பசங்க வளர ஆரம்பிச்சுடுவாங்க… தேவைகள் பெருகிடும். படிப்பு, கல்யாணச் செலவுனு எதிர்கால பயம் பிடிச்சு ஆட்டி வைக்கும். பார்க்கிற வேலையிலே கவனம் செலுத்த முடியாது. விளைவு– உன் முதலாளி உன்னை எப்படிடா கழட்டி விடலாம்னு பார்த்துட்டு இருப்பாரு!
அதனாலதான் சொல்றேன். இப்பவே, ரத்தம் சுழண்டு பாயிறப்பவே ஏதாவது தொழில் தொடங்கு. அஞ்சு வருஷத்திலே பிசினஸ் வளர்ந்து, உனக்காக உழைக்க பத்து பேர் வந்திருப்பான். நீ கண்காணிச்சா மட்டும் போதும். உனக்கு என்ன தெரியுமோ அதே ஃபீல்டுலே உடனே ஒரு தொழில் தொடங்கிடு!” என்றார். செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவர் சொல்லில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர் என ஊழியர்கள்.
‘ஆஹா, அடிப்படையிலேயே கை வைக்கிறாரே!” என்று பதற்றம் வர, “வாங்க சார், டீ சாப்பிடலாம்!” என்று நண்பரை வெளியே தள்ளிக் கொண்டு போனேன்.
லண்டனில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் பணிபுரிந்து கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, புதிதாகத் தொழில் தொடங்க எண்ணினார். என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து செய்தித்தாள்கள் அனைத்திலும் முதல் பக்கத்தில் இடம் பெற்ற ஒரு செய்தி அவர் கண்ணில் பட்டது.
அதைக் கண்டவுடன் அவரின் மூளை பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. தனது உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் லட்சம் லட்சமாக கடன் வாங்கினார்.
லண்டன் மாநகர் வீதி முழுவதும் அலைந்து கருப்புத் துணிகள் அனைத்தையும் கொள்முதல் செய்தார். ஒரு சரக்கு குடோனை அறையை வாடகைக்கு எடுத்து, அங்கு அவற்றை நிரப்பி வைத்தார். இரண்டே நாட்களில் நகரின் அனைத்து கடைகளின் கருப்பு துணிகளும் இவர் வசம்!
உறவினர்களுக்கு ஒரே குழப்பம். ‘ஏன் இவ்வளவு கோமாளித்தனமாக நடந்து கொள்கிறார்? ஒருவேளை இவர் துணிக்கடை வைப்பதாக இருந்தாலும் கூட எல்லோரும் வெறுத்து ஒதுக்கும் கருப்பு துணியை மட்டும் வைத்து எப்படி கடை நடத்த முடியும்? இவரை நம்பிக் கொடுத்த பணம் கைக்கு வந்து சேருமா..? என்றெல்லாம் சந்தேகக் கண்ணோடு அவரை நோக்கினர்.
முதல் நாள் கழிந்தது. இரண்டாவது நாளும் போனது. மூன்றாவது நாள் மாலை அந்த மனிதர் எதிர்பார்த்தது நடந்தது! ‘கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நம் இங்கிலாந்து பிரதமர் மரணமடைந்தார்’ என்ற செய்தி பிரிட்டிஷ் அரசால் வெளியிடப்பட்டது டிவியில் பிளாஷ் நியூஸ் பார்த்தவுடனே அவர் முன்னணி டிவி மற்றும் பத்திரிகை அலுவலகம் சென்று கருப்பு துணிகள் எங்களிடம் கிடைக்கும் என்று சிறிய விளம்பரம் தந்தார்.
இங்கிலாந்தில் தலைவர் ஒருவர் இறந்து விட்டாரென்றால் அனைவரும் கருப்புத் துணியை சட்டையில் குத்திக் கொண்டு துக்கம் தெரிவிப்பது வழக்கம். கருப்பு துணி வாங்க ஊரெல்லாம் அலைந்து திரிந்தும் அது கிடைக்கப் பெறாத பொதுமக்கள், இந்த விளம்பரம் பார்த்து, இவர் கடையை நோக்கி படையெடுத்தனர்.
கடையின் முன் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம். போலீசைக் கொண்டு சமாளிக்க வேண்டிய அளவுக்கு கூட்டம். மனிதர் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி விற்றார். விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் துணியை வாங்கிச் சென்றனர். அன்றே அவ்வளவு கருப்பு துணியும் விற்றுப் போனது. பெரும் பணக்காரர் ஆனார் அந்த ஊழியர்.
இது வெறும் கதை அல்ல. நடந்த உண்மை நிகழ்ச்சி. குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கு விற்றால், லாபம் அதிகம் ஈட்டலாம் என்பதே இந்த நிகழ்ச்சி சொல்லும் பாடம்.
கதையை விட்டு வெளியே வருவோம்.
சொல்லப்படுகிற விலை சரிதானா?
சப்ளையர்களிடம் இருந்து பெறப்பட்ட விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தொழில் முனைவோர் முடிவு எடுக்கும் முன் சில செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, பிற சப்ளையர்களின் விலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்த பிறகு பொருட்களை வாங்குவது குறித்த முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், மேலோட்டமாகப் பார்க்கிற போது குறைவாகத் தோன்றும் சிலரின் விலைப்பட்டியல் உண்மையில் பார்த்தால் பன்மடங்கு அதிகமாகக் கூட இருக்கலாம்.
அதேசமயம், பொருட்களின் தரத்தைக் கவனிப்பதும் மிக அவசியம்! பொருட்களைக் கொள்முதல் செய்கிறபோது பொதுவாக எந்த பொருளுமே மூன்று வகையான தரங்களில் கிடைக்கும். அன்றாட பயன்பாட்டுக்குத் தேவைப்படும் பேனாவை எடுத்துக்கொள்ளலாம். அதில் 15 ரூபாய்க்கு ஜெல் பிராண்ட் பேனாவும், 5 ரூபாய்க்கு ரெனால்ட்ஸ் பேனாவும், 2 ரூபாய்க்கு சாதாரண பேனாவும் சந்தையில் கிடைக்கின்றன.
பொதுவாக, தொழில் முனைவோர் விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்துக்காக தரமற்ற பொருளைக் கொள்முதல் செய்து, அதனால் பிற்பாடு அவதிக்குள்ளாவதைத் தவிர்க்க வேண்டும். 2 ரூபாய் பேனாவை வாங்கினால் செலவு குறையும் என்றாலும் கூட எழுதும்போது மையின் ஓட்டம் சரியாக இல்லாமல் பேனாவை வாங்கியதன் நோக்கமே அடிபட்டுப் போகும். மாறாக 5 ரூபாய்க்கு விற்கப்படும் தரமான பேனாவை வாங்கலாம்.
எந்தப் பொருளிலுமே மூன்றாவது தரத்தைத் தவிர்த்து, இரண்டாவது தரத்தைப் பயன்படுத்தலாம். முதல் தரம் தான் வேண்டுமெனில் முதல் தரத்தில் கொஞ்சம் எண்ணிக்கையிலும், இரண்டாவது தரத்தில் அதிக எண்ணிக்கையிலும் கொள்முதல் செய்து அலுவலகத்தில் கீழ் நிலையில் உள்ளோருக்கு இரண்டாவது தரத்தையும், மேல்தட்டு நிர்வாகிகளாக உள்ளவர்களுக்கு முதல் தரத்தையும் வழங்கலாம்.
——-
இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker