ஒரு சிறுவன், தன் தாய் மீன் வறுப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் மீனின் தலைப் பகுதியை வெட்டிய தாய், பிறகு மீனின் வால் பகுதியை வெட்டினார். பிறகு மீனின் தலை, வால், உடல், ஆகிய மூன்றையும் தனித் தனியாக வாணலியில் போட்டு வறுத்தார். அதைப் பார்த்த மகன், ‘ஏன் தலையையும் வாலையும் தனித் தனியாக வெட்டி வறுகிறாய்? முழு மீனையும் அப்படியே வறுத்தால் என்ன?’ என்று தன் தாயிடம் கேட்டான்.
சிறிது யோசித்த தாய் சொன்னாள் “நீண்ட காலமாக நான் இப்படித்தான் சமைத்து வருகிறேன் என் அம்மா எனக்கு இப்படித்தான் கற்றுக் கொடுத்தார்.”
இந்தப் பதிலில் மன நிறைவு அடையாத மகன், பாட்டியிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டான். பாட்டியும், “எனக்கு காரணம் தெரியவில்லை. என் அம்மாவும் அப்படித்தான் கற்றுத் தந்தார்” என்று கிரைப் வாட்டர் விளம்பர பாணியில் பதில் சொன்னார்.
தன் கொள்ளுப்பாட்டியிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டான். நீண்ட யோசனைக்குப் பிறகு அம்மூதாட்டி காரணத்தை நினைவு கூர்ந்து சொன்னார். ‘அப்போது எங்கள் வீட்டில் மீனை வறுக்க சிறிய வாணலி தான் இருந்தது. மொத்த மீனையும் ஒரே தவணையில் வறுக்க முடியாது என்பதால் அப்படி சமைத்தோம்’ என்றார்.
இக்கதையில் வரும் வாணலி போன்றுதான் நம் செலவினங்களும். காலங்காலமாக ஒரு செலவு செய்யப்பட்டு வருகிறது என்றால், அதன் காரணத்தை யாரும் அலசி ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஏதோ ஒரு தேவைக்காக செய்யப்படும் செலவுகள், அத்தேவை நிறைவடைந்த பிறகும், காரணமில்லாமல் காலங்காலமாக தொடர்வதை நாம் பல நிறுவனங்களில் காணலாம்.
ஏர்லைன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்ற கதை.
விமானப் போக்குவரத்து நடத்தும் தொழில் என்பது ஆடம்பரச் செலவுகள் அதிகம் மிகுந்த தொழிலாகும். இந்தத் துறையில் ஆடம்பரச் செலவுகளையெல்லாம் அறவே தவிர்த்துவிட்டு விமானப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று காட்டியது, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தின் கதை இன்றளவும் நிர்வாகவியல் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி பாடம் ( Case Study) ஆகும்.
அப்படி என்ன சிக்கன நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டது..?
நிறுவனத்தில் குறைந்த பணியாளர்களை வைத்துக்கொண்டு கூடுதல் நேரம் பணியாற்றும் வகையில் யூனியனுடன் பேசி ஒப்பந்தத்தை இந்நிறுவனம் மாற்றி அமைத்தது. அவர்களுக்கு வருமானத்தையும் அதிகரித்தது. மேலும் நிறுவனத்தின் பங்குகளில் பணியாளர்களும் முதலீடு செய்ய வாய்ப்பளித்து, அவர்களை பங்குதாரர்களாகவும் ஆக்கிக் கொண்டது. இதனால், பணியாளர்கள் வேலை தாவுவது குறைந்தது. புதிய பணியாட்களைத் தேடி செலவழிப்பதும் குறைந்தது.
இப்படியாக, பெரும் தொகை மிச்சமாக, வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் சேவை வழங்கி, வருமானத்தை அதிகரித்து வெற்றி பெற்றது.
‘புகைவண்டியில் பயணம் செய்வோரின் எண்ணிக்கைதான் உலகில் மிக அதிகம். அவர்களை விமானத்தில் பயணம் செய்ய வைப்பதே எங்களது நோக்கம்’ என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியது நினைவு கூறத்தக்கது. அமெரிக்காவில் அந்த வெற்றியை பின்பற்றி, பல விமான நிறுவனங்கள் தற்போது ஆகாயத்தில் சிக்கனமாக சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டன.
———— இராம்குமார் சிங்காரம். Tamil motivational speaker