fbpx
ரொக்கக் கொள்முதல் அதிக லாபம் தரும்! | Cash Purchases Are More Profitable!

Best media trainer in Tamil Nadu
  • February 4, 2022

கடனுக்கு வாங்கினால் கூடுதல் விலையிலும், ரொக்கத்துக்கு கொள்முதல் செய்தால் குறைவான விலையிலும் பொருட்கள் கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே!

  மருந்துக்கடை நடத்தி வரும் நண்பர் ஒருவர் சென்னையில் பாரிமுனையில் உள்ள பஜாரில் ரொக்கக் கொள்முதல்  செய்தால் 20% குறைவான விலையில் பொதுவான மருந்துகளை வாங்க முடியும் என்கிறார். 

மருந்து விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் வரைதான் லாபமே கிடைக்கும். கொள்முதல் செய்யும்போ தே 20%-ஐ மிச்சப்படுத்தினால் லாபம் அதிகரிக்கும் அல்லவா? கையில் பணம் இருந்தால் ரொக்கக் கொள்முதல் செய்வதே சாலச்சிறந்தது. அதையும் மொத்த விற்பனையாளரிடமோஉற்பத்தியாளரிடமோ  நேரடியாகக் கொள்முதல் செய்வது இன்னும் நல்லது. 

கடனுக்கு வாங்கி, காசுக்கு விற்றல்’  என்ற கொள்கையே நம் தொழில்முனைவோர் மத்தியில் அதிகம் உள்ளது. தொடக்கத்தில் பணத்துக்குச் சிரமப்படும் போது இது சரியே. ஆனால், நாள் செல்லச் செல்ல ரொக்கத்துக்கு வாங்குதலே லாபம். 

 இது போலவே, நடைமுறைச் செலவுகளில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம். பொருட்களைக் கொள்முதல் செய்யும் தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அன்றாடச் செலவுகளையும் கவனிக்க வேண்டும். 

இரண்டு சக்கர வாகனம் வாங்கினால், 50 சி.சி-யா, 100 சி.சி யா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். 50 சி.சி வாகனம் விலை குறைவாகவே இருக்கும் என்றாலும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிலோ மீட்டர் அளவே அது மைலேஜ் தரும். ஆனால் 100 சி.சி வாகனமோ ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். 100 சி.சி வாகனம் வாங்கினால், பெட்ரோல் செலவில் 30%  வரை நாம் சேமிக்க முடியும். 

நாம் வாங்கும் எந்தப் பொருளுக்கும் குறிப்பிட்ட கால அளவில் கொள்முதல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாம் கொள்முதல் செய்த விலைப் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு நமக்கு உடனடி அவசியமில்லாத பொருட்கள் எதையாவது உணர்ச்சி வேகத்தில் கொள்முதல் செய்கிறோமா..? என்று கவனிக்க வேண்டும். 

அதுபோல, முன்பு கொள்முதல் செய்த விலையில் தற்போது ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா…  கொள்முதல் செலவுகளை வேறு எந்த வகையில் குறைக்கலாம்என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிந்தால் கொள்முதல் மற்றும் கொள்முதல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு நல்ல அதிகாரியை தனியாகவே வேலைக்கு நியமிக்கலாம். 

கொள்முதலில்  தவிர்க்க வேண்டியவை 

  • குறைவான விலையில் கிடைக்கிறதே  என்பதற்காக தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். 
  • பேஷன் கருதி அடிக்கடி பொருட்களை புதுப்பிக்க வேண்டாம். பைக், செல்பேசி, கைகடிகாரம், கண்ணாடி போன்றவற்றை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்கலாம். 
  • வேகமாகக் காலாவதியாகும் பொருட்களுக்கு சிலர் விலைச் சலுகை அறிவிப்பது உண்டு. குறைந்த விலையில் கிடைக்கிறதே என்பதற்காக, அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்வது தவறு. இது உங்கள் மூலதன பணத்தை முடக்கிப் போடும். 

உதாரணமாக, ஒரு குளிர்பான நிறுவனம், ‘கூடுதல் எண்ணிக்கையில் கொள்முதல் செய்தால் குளிர்சாதனப் பெட்டியை இலவசமாகத் தருகிறோம். அல்லது பெயர்ப் பலகையை இலவசமாக வைத்து தருகிறோம்என்று ஆசை காட்டக்கூடும். இது தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரக்கூடியதுதான் என்றாலும் கூட, தேவைக்குமேல் இதனைக் கொள்முதல் செய்து அடுக்கி வைத்துக் கொள்வதும் தவறே. 

  • ரொக்கக் கொள்முதல் செய்கின்றபோது பொருட்களை நன்கு ஆராய்ந்து பார்த்து வாங்குவது அவசியம். ஏனெ னில்கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது கடினம். 
  • மாதத்தில் முதல் வாரம்  கொள்முதல் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், முதல் வாரத்தில் பெரும்பாலானோர் கொள்முதல் செய்வதால் அதிகமாக நாம் பேரம் பேச முடியாது. 

இதுவே, கடைசி வாரத்தில் கொள்முதல் செய்கிறபோது சந்தையில் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் நாம் கேட்கின்ற விலைக்கு பொருட்களைப் பெற முடியும். (இந்த விதி எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தாது). 

                    —–  இராம்குமார் சிங்காரம், Best Media Trainer in Tamil Nadu

Comments are closed.