பணக்காரர்களின் பலம் என்னவென்றால், அவர்கள் சின்ன விஷயங்களைக்கூட நுணுக்கமாகத் திட்டமிடுவதுதான்.
இப்படி பணக்காரர்கள் சிறிய விஷயத்தைக் கூட நுணுக்கமாகச் செய்வதால், அவர்களுக்கு வெற்றி கிட்டுகிறது. ஆனால் நாமோ பெரிய விஷயத்தைக்கூட மேலோட்டமாகச் செய்துவிட்டு ‘வரட்டும்; பார்த்துக் கொள்ளலாம்‘ என்று மெத்தனமாய் இருந்து விடுகிறோம்.
காய்கறி வியாபாரிகள் பலரும் வாகனங்களை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்று உருளைக்கிழங்கை கொள்முதல் செய்து, சந்தைக்கு கொண்டு வந்து தரம் பிரித்து விற்பது வழக்கம்.
எல்லா வியாபாரிகளும் கொள்முதல் செய்ய நாள்தோறும் ஒரே நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கிளம்பினாலும் கூட, ஒரேயொரு வியாபாரி மட்டும் சந்தைக்கு வந்து முதலில் விற்பனை செய்து விடுவார்.
இவரால் மட்டும் இது எப்படி முடிந்தது?
அதற்கு இவர் பின்பற்றிய ஒரு நுணுக்கம்தான் காரணம்.
வியாபாரிகளெல்லாம் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்துவிட்டு, சந்தைக்கு வந்து அளவு வாரியாக தரம் பிரிப்பர். இப்படி தரம் பிரிக்க ஒரு மணி நேரமாவது ஆகும்.
இதற்கு மாறாக, இவர் மட்டும் பள்ளம், மேடான பாதையில் வாகனத்தை ஓட்டி வந்து சந்தையில் நிறுத்துவார். அந்தப் பாதையில் பயணிக்கும்போது வண்டி குலுங்கிக்கொண்டே வருவதால், சிறிய உருளைக்கிழங்குகள் அடிப்பகுதிக்கும், பெரிய உருளைக்கிழங்குகள்
மேற்பகுதிக்கும், நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்குகள் நடுவிலும் நின்றுவிடும். எனவே, சந்தைக்கு வந்ததும் அப்படியே அளவுவாரியாக எடுத்து, முதல் ஆளாக விற்று லாபம் ஈட்டி விடுவார்.
இப்படி நுட்பமான திட்டமிடல்தான் பணக்காரர்களை வித்தியாசப் படுத்தி காண்பிக்கிறது.
–ராம்குமார் சிங்காரம், Motivational Speaker in Tamil Nadu