ஒரு விறகுவெட்டி நாள்தோறும் 20 கிலோ எடையுள்ள மரத்தின் விறகுகளை வெட்டுவது வழக்கம்.
நாள் செல்லச் செல்ல அவன் வெட்டும் மரங்களின் அளவு குறையத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 15 கிலோ, 10 கிலோ, 5 கிலோ என சரிந்து கொண்டே வந்தது.
இதை உணர்ந்த அந்த விறகுவெட்டி, தனக்கு வயதாகி விட்டது என்று வருந்தத் தொடங்கினான். ஆனால், அந்த மர விற்பனை நிறுவனத்திற்கு புதிதாக வந்த நிர்வாக அதிகாரி இவனது கட்டுமஸ்தான உடலுக்கும், இவன் வெட்டுகிற மரத்தின் அளவிற்கும் சம்பந்தமே இல்லாததைக் கண்டு சற்று யோசித்தார். அவன் மரம் வெட்டுவதை ஒரு நாள் அருகில் இருந்து கவனித்தார்.
பிறகு அவனை தன் அறைக்கு அழைத்து, “உன் உடம்பு வலிமையாக இருக்கிற அளவிற்கு, உன் புத்தி கூர்மையாக இல்லை. முதலில் உன் கோடாரியைத் தீட்டிவிட்டு வா” என்றார்.
நாள்தோறும் நாம் 10 நிமிடங்கள் ஒதுக்கி, நாம் அன்றைக்கு கடந்து
வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதும், மறுநாள் பயணிக்க இருக்கிற பயணத்தைத் திட்டமிடுவதும், விறகுவெட்டி கோடரியை கூர் தீட்டுவது போன்றதுதான்.
கடுமையாக உழைப்பது எவ்வளவு அவசியமோ, எதற்காக உழைக்கிறோம் என்ற தெளிவும் அவ்வளவு அவசியம். குளத்தில் மிதந்து செல்லும் மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? நீர் தெளிவாக இருந்தால் அவை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நேரில் சென்று கொண்டே இருக்கும். ஒருவேளை நீர் கலங்கி இருந்தால் ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கும். நாமும் அப்படித்தான், நம் சிந்தனைகள் தெளிவாக இருந்தால் வாழ்க்கையில் தொலைதூரம் பயணிக்க முடியும். இல்லையென்றால் செக்கை சுற்றிச் சுற்றி வரும் மாடு போல் நாமும் ஒரே இடத்தை சுற்றி சுற்றிச் வந்து கொண்டே இருப்போம்.
–ராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu