ஒரு நாள் அரசர் கிருஷ்ண தேவராயர் விலை உயர்ந்த அரேபியக் குதிரையில் வெளியே புறப்பட்டார். தெனாலிராமன் தானும் வருவதாக கூறினான்.
அரசரோ, “தொத்தலும் வத்தலுமான உன் குதிரை, என் குதிரையோடு நடக்க முடியாதே!” என்றார்.
“அரசே! என் குதிரை மட்டமான குதிரைதான். விற்றாலும் பத்து பொண்ணுக்குத்தான் விலை போகும். உங்கள் குதிரை பத்தாயிரம் பொன் மதிப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், என் குதிரையைக் கொண்டு நான் செய்யும் காரியத்தை உங்கள் குதிரையைக் கொண்டு நீங்கள் செய்ய முடியாது” என்றான் தெனாலிராமன்.
“ஏன் முடியாது? உன் குதிரை செய்யும் காரியத்தை என் குதிரையைக் கொண்டு நான் செய்கிறேன். அப்படி செய்யாவிட்டால் ஆயிரம் பொன் பரிசாகத் தருகிறேன்” என்றார் மன்னர்.
சட்டென வாளை உருவி தன் குதிரையின் கழுத்தை வெட்டினான் தெனாலிராமன். திகைத்துப் போன அரசர் “ஏய்… என்ன இப்படிச் செய்து விட்டாய்?” என்றார் பதட்டமாக.
“நோஞ்சானான இந்தக் குதிரையால் பராமரிப்பு செலவு தான் கூடிக்கொண்டே போனது. இதுவரை பயனில்லாத குதிரை இன்றுதான் ஆயிரம் பொன்னை சம்பாதித்துக் கொடுத்து விட்டதே!” என்றான் தெனாலிராமன். அரசர் அவனது சமயோசித புத்தியை பாராட்டினார். ஆயிரம் பொன்னும் பரிசளித்தார்.
இதிலிருந்து நீங்கள் கவனிக்க வேண்டியது முட்டாள் மன்னன் யாரென்று கவனித்து லாபம் பார்பததில்லை… பராமரிப்புச் செலவு என்கிற பாயிண்ட்டைத்தான். எல்லா இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
எந்த இயந்திரத்துக்கும், கருவிக்கும், வாகனத்துக்கும் ஒரு கால வரையறை உண்டு. அந்தக் கால கட்டத்துக்கு பிறகு அவற்றைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் வருமானத்தை விட, அவற்றால் ஏற்படும் செலவுகள் அதிகமாகும். இதை கருத்தில் கொண்டே வேகமாகக் காலாவதியாகும் தொழில்நுட்பக் கருவிகளைப் பல நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்காமல் குத்தகை(Lease)க்கு எடுக்கின்றன.
விலைக்கு வாங்குதல். குத்தகைக்கு எடுத்தல்… எது சிறந்தது?
பெரும்பாலான தொழில் முனைவோருக்கு இயந்திரங்கள், கருவிகள் வாங்கும் போது இது போன்ற ஐயம் ஏற்படக்கூடும். இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் ஏற்புடையதுதான் என்றாலும், சூழல் மற்றும் தேவைக்கேற்ப எது சிறந்தது என்பதை தொழில் முனைவோர் முடிவு செய்து கொள்ளலாம்.
குறுகியகாலத் தேவை இருப்பின் இயந்திரங்கள்/ கருவிகளை வாடகைக்கோ, குத்தகைக்கோ எடுத்துக் கொள்ளலாம்.
நீண்டகாலத் தேவையிருந்து, அடிப்படை தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்குமானால், அப்போதும் இயந்திரங்களை குத்தகைக்கு பெறுவதே சிறந்ததாகும்.
முதலீடு செய்வதற்கு கையில் குறைவான தொகையே இருக்குமானால் குத்தகைக்கு எடுப்பது ஒன்றே வழி.
குத்தகைக்கு எடுத்தல் அல்லது விலைக்கு வாங்குதல் என்ற முடிவை மேற்கொள்வதற்கு தொழில் முனைவோர் அதிகபட்சம் ஐந்தாண்டுப் பயன்பாட்டை மனதில் கொண்டு செலவுகளை கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
சென்னையில் தற்போது சில கார்ப்பரேட் அலுவலகங்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என்ன தெரியுமா…? நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை காலையில் வீட்டிலிருந்து அழைத்து வரவும், மாலையில் கொண்டு விடவும் தனியார் வேன்களை வாடகைக்கு எடுக்கின்றன.
இன்னும் ஒருபடி மேலே போய் சில நிறுவனங்கள் தனது அதிகாரிகளுக்கு வழங்கும் கார்களைக்கூட டிராவல்ஸ் நிறுவனங்களிடம் குத்தகைக்கு எடுத்துள்ளன.
எல்லா நிறுவனங்களும் தமது அலுவலகத்துக்கு தேவைப்படும் செக்யூரிட்டி வேலையைக்கூட தனியார் மேன் பவர் (Man Power) நிறுவனங்களின் வசம் அவுட் சோர்ஸ் செய்துள்ளன. சில பன்னாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களைப் பராமரிக்கும் பணிகளான பெருக்குதல், துடைத்தல், கழுவுதல் மற்றும் சமையல் போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
இவற்றை வெளியே குத்தகைக்கு விடுவதால் நிறுவனத்திற்கு எப்படி செலவு குறையும்?
ஊழியர்களை வேலையில் சேர்ப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கிராஜீவிட்டி, பி.எஃப், இன்சென்டிவ், விடுமுறை அலவன்ஸ், சீருடை அலவன்ஸ், செல்போன் வாடகை போன்ற பல செலவுகள் மிச்சமாகும்.
ஊழியர்கள் விடுப்பு எடுத்தால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யும் பொறுப்பு நிறுவனத்திற்கு கிடையாது.
டிராவல்ஸ் நிறுவனத்திடம் குத்தகைக்கு விடும்போது வாகனம் விபத்துக்குள்ளானால் குத்தகைக்காரரே பார்த்துக்கொள்வார். வாகனங்கள் பழசாகிப் போனால், புதிய வாகனங்களை மாற்றும் பொறுப்பும் அவரையே சாரும். வாகனக் காப்பீடு, பராமரிப்பு போன்ற செலவுகளும் அவர் பொறுப்பே.
மெடிமிக்ஸ் சோப்பு தயாரிக்கும் நிறுவனம், தன் உற்பத்தியை விட, அதை விற்கும் முறையிலேயே கவனம் செலுத்த வேண்டி இருந்ததாம். விநியோகத்தில்தான் பலம் என்ற போது, வாகனச் செலவு பெருமளவு ஆகியிருக்கிறது. மூத்த நிர்வாகி ஒருவர், “சார்! நாமே சொந்தமாக சில வாகனங்களை வாங்கி, அதன் மூலம் விநியோகம் செய்தால், கணிசமான செலவை குறைக்க முடியும். வாடகை வாகனத்தை விட, இதில் நமக்கு செலவும் குறையும்” என்று சொல்லி இருக்கிறார்.
அதன் நிர்வாகி என்ன சொன்னார் தெரியுமா…?
“நமக்குத் தொழில் சோப்பு தயாரித்து, விற்பது…! நீங்கள் சொல்வது போல நாம் வாகனங்களை விலைக்கு வாங்கினால், அதனுடைய பராமரிப்புச் செலவுக்குத் தனியே ஒரு ஆளை நியமித்து, அதனால் ஏற்படும் வரவு செலவுகளை கண்காணிக்க வேண்டி இருக்கும். அதற்கு தனிப் பிரிவை உண்டாக்கி, சில ஆட்களை நியமிக்க வேண்டியிருக்கும். நாம் நமக்கான வேலையை மட்டும் பார்க்கும் போது, செலவுகள் சிறிதளவு கூடினாலும் நம் இலக்கின் கவனம் சிதறாமல் இருக்கும். எனவே, வாடகை வாகனங்களை அமர்த்துங்கள். அதுதான் நம் தொழிலை உயர்த்திக் கொடுக்கும்” என்று உத்தரவிட்டாராம்.
நிறுவனங்கள் தம்முடைய தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிக லாபம் ஈட்ட இதுபோன்ற வழிகளைப் பின்பற்றுவதுதான் சிறந்தது.
சரி… இதை அனைத்து நிறுவனங்களும் ஏன் பின்பற்றுவதில்லை ?
இவை பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு கார் அல்லது ஒரு செக்யூரிட்டி தேவைப்படுவோருக்கு இது விலை கூடுதலான செலவு. ஆனால் 10 கார்கள், செக்யூரிட்டிகள் தேவைப்படுவோருக்கு அல்லது 20 கார்கள்/ செக்யூரிட்டிகள் போன்ற அதிக எண்ணிக்கையில் தேவைகள் இருப்பின் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது செலவு கணிசமான அளவில் குறையவே செய்யும்.
இன்னொரு சான்றையும் நாம் பார்ப்போம். நகல் எடுக்கும் இயந்திரங்கள் (Photo Copier) தற்போது குத்தகைக்கு விடப்படுகின்றன. இதன்படி ஒரு நிறுவனம் 2,000 அல்லது 3,000 ரூபாயை மாதத் தவணையாகச் செலுத்தி 2,500 முதல் 4,000 நகல்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் தொழில் முனைவோருக்கு என்ன லாபம்?
நகல் எடுக்கும் இயந்திரத்துக்கு உடனடியாக ரூபாய் 50,000 முதலீடு செய்யத் தேவையில்லை. ஒருவேளை அந்தத் தொகையை வங்கியில் கடனாக வாங்கி இருந்தால் அதற்கு கட்ட வேண்டிய வட்டிச் செலவு மிச்சம்.
மேலும், நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மின்னணு இயந்திரத்துக்கு பராமரிப்பு தேவைப்படுவதாலும் அவற்றின் உதிரிபாகங்கள் சந்தையில் கிடைக்காது என்பதாலும் மீண்டும் புதிய இயந்திரத்துக்கான பணம் செலவிடத் தேவையில்லை.
குத்தகை எடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அந்த நகல் இயந்திரத்தை நமது சொந்த இயந்திரம் போல் பயன்படுத்த முடியும்.
இது போன்ற தொழில் முனைவோர் தங்கள் அலுவலகத்தில் உள்ள கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும்முன் இது அவசியம் தானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு அலுவலகத்திற்கு முதலீட்டுச் செலவுகளில் பெரும்பான்மையை இதுபோன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் வாடகை முறையில் வாங்கிப் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கலாம். இப்போது, கம்ப்யூட்டர் மாதம் ரூபாய் 1000 –க்கே வாடகை கிடைக்கின்றது. இதில் ஏதேனும் பழுது, குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்களே மாற்று ஏற்பாடு செய்வது, இலவசமாகப் பழுது நீக்கித் தருவது போன்றவற்றை செய்கிறார்கள். நாம் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் என்று எதையும் கொடுக்கத் தேவை இல்லை.
சொந்தக் கம்ப்யூட்டர்களைவிட, வாடகை கம்ப்யூட்டர்களே லாபம் தரும் என்றால் அதில் போவதுதானே புத்திசாலித்தனம்!
—– இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu