பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள்: பத்து ரூபாய்! என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய் என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே. கீழே இறங்கி விட்டார். அடுத்து ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான! பஸ்ஸுக்காக காத்திருந்த மிகப்பெரிய நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு, மனம் பொறுக்காமல், முதியவரை அருகில் அழைத்தார். இதுதான் படித்தவருக்கும் படிக்காதவருக்கும் உள்ள வித்தியாசம்..! அந்த இணைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்கு போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்.. செய்யுங்கள். நூறு ரூபாய்க்குப் பதில் 300 ரூபாய்க்கு விற்கும்போது உங்களுக்கு இதைவிட கூடுதல் லாபம்தான் கிடைக்கும். காலத்துக்கு ஏற்ப மாறப் பாருங்கள். இல்லாவிட்டால், கஞ்சிக்கு வழியில்லாமல் காணாமல் போய்படுவீர்கள்” என்று ஆலோசளைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ‘அடப்போங்க சார்! அவன் என் பையன்தான். எல்லாப் பழமும் எங்களுடையதுதான். ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு விற்றால்… சட்டெனவாங்குவதற்கு மக்களுக்கு மனசு வராது. அதனால் தான், ‘ஐந்து பழம் பத்து ரூபாய்’னு முதல் ரவுண்ட் போவேன். பின்னாலேயே என் மகன் ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு வருவான். மக்கள் அதே தரம் கொண்ட பழத்தை சல்லிசா வாங்குறதா நினைச்சு, அவங்கிட்டே வாங்குவாங்க. நாங்க தனித்தனி பஸ்ஸிலே விற்கிறதைவிட, இப்படி வித்தா, எல்லாத்தையும் முடிச்சுட்டு மத்தியான சாப்பாட்டுக்கே வீட்டுக்குப் போயிட முடியுமே! இதெல்லாம் கிராமத்து டெக்னிக் உங்களுக்குப் புரியாது.” என்றபடி இடத்தைக் காலி செய்தார் முதியவர். காலத்துக்கு ஏற்பவும், இடத்துக்கு ஏற்பவும் திட்டங்களை மாற்றிக் கொள்பவரே வெற்றிபெற முடியும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker