fbpx
வெற்றி நிச்சயம் … இது வேத சத்தியம் ! | Business Growth Tips

Best tamil motivational speaker
  • October 21, 2021

கஜினி படம் பார்த்தீர்கள் தானே…!  ‘ஹாய்ஐயாம் சஞ்சய் ராமசாமி!’ என்று ஒரு டூப்ளிகேட் அறிமுகம் செய்து கொள்வார். எதிரில் இருப்பவர் தான் சஞ்சய் ராமசாமி என்பதை அறியாமலேயே! 

அப்பொழுது அசின் சட்டென்று சொல்லுவார்முட்டாள்எந்த தொழிலதிபராவது தானே முன்வந்து சாதாரண நபரிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொள்வாராஇப்படி சொதப்பிட்டியே!’ என்று கடிந்து கொள்வார். 

உண்மைதானே! தன்னம்பிக்கையும், சாதனை புரியும் தன்மையும் கொண்ட ஒருவர் எப்போதுமே கம்பீரமாக இருப்பார். அப்படி உங்களையும் வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? 

உங்கள் ஊரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர்கள் 20 பேரைப் பட்டியலிடுங்கள். அவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சுக்களைத் தூரத்திலிருந்து கவனியுங்கள். அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த 20 பேரையும் ஒரு முறையாவது நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பாராட்டிப் பேசுங்கள். அவர்கள் பேசுவதை சிரித்த முகத்தோடு காது கொடுத்துக் கேளுங்கள். அவர்கள் மனதில் நிற்கும் வண்ணம் புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து அனுப்புங்கள். 

ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உங்கள் மீது நன்மதிப்பு ஏற்படும் போது இன்னும் நெருக்கமாகுங்கள். அவர்களே ஏதேனும் புதிய தொழில் வாய்ப்புகளை உங்களுக்கு சொல்லலாம். 

எல்லாம் சரிமுதலில் அவர்களை எப்படி சந்திக்க வாய்ப்பு  பெறுவது? 

அது மிகவும் எளிது. அவர்கள் உறுப்பினராக இருக்கும் ரோட்டரி கிளப்பிலோ, லயன்ஸ் கிளப்பிலோ, ஜூனியர் சேம்பரிலோ, ரவுண்ட் டேபிளிலோ நீங்களும் உறுப்பினராகச் சேரலாம். அல்லது அவர்கள் அங்கம் வகிக்கும் வர்த்தக சங்கங்களிலோ, பொழுதுபோக்கு கிளப்புகளிலோ அவர்களைச் சந்திக்கலாம். அவர்களுடன் காலையில் வாக்கிங் போகலாம்அல்லது உடற்பயிற்சி மையத்திற்கு செல்லலாம். யோகா கற்கலாம். டென்னிஸ் விளையாடலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளன. 

 மேலும் நீங்கள் அவர்களோடு உடன் இருக்கும் போது அவர்களைச் சந்திக்க பிற பெரிய பணக்காரர்கள் வரக்கூடும். அப்போது அவர்களது தொடர்பும் உங்களுக்குக்  கிடைக்கலாம். 

வெற்றியாளர்களோடு இருக்கும்போது அவர்களது தன்னம்பிக்கையும், உற்சாகமும், புத்துணர்ச்சியும் உங்களையும் தொற்றிக்கொள்ளும். எந்த ஒரு நட்பையுமே வெற்றியாளர்கள் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகுவார்கள். அந்த அணுகுமுறையை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். ஒரு தொழில் முனைவர் பிறர் நம்பிக்கையைப் பெற என்ன செய்ய வேண்டும்…? 

ஒரு சிற்றரசர், தம்முடைய சிறிய படையைக் கொண்டு தம்மைவிட பலம் வாய்ந்த, பெரிய படையைக் கொண்ட நாட்டின் மீது படையெக்கத் திட்டமிட்டார். உடனே தனது படைத் தளபதிகளை அழைத்து விவரத்தைக் கூறினார். 

இதைக் கேட்ட அனைத்து தளபதிகளும் சற்று தயங்கவே அரசர் உடனடியாக தன் பையிலிருந்த ஒரு காசை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சொன்னார். ‘’சரிமுடிவை இயற்கையிடமே  விட்டுவிடுவோம்இந்தக் காசை  சுண்டிவிடுகிறேன் தலை விழுந்தால் போருக்குச் செல்வோம், பூ விழுந்தால் போரைத் தவிர்ப்போம்.”  என்றபடி, அரசர் காசை மேல் நோக்கி  சுண்டிவிட்டார். தலை விழுந்தது. ‘வெற்றி நமதேஎன்று வீர முழக்கமிட்டு அனைவரும் மன்னர் பின் போருக்கு அணிவகுத்தனர். 

இவர்களது திடீர் படையெடுப்பால், எதிரி நாட்டுப் படை சற்று ஆட்டம் கண்டு விட்டது. எவ்வித முன்    ஏற்பாடுமின்மையால் அந்தப் படை, அளவில் பெரிதாக இருந்தும்கூட தோல்வியையே தழுவியது. 

அனைவரும் வெற்றிக் களிப்பில் மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அரசருக்கு அருகில் வந்த ஒரு தளபதி கேட்டார்; அரசே! அன்று மட்டும் பூ விழுந்திருந்தால் நாம் போரைத்  தவிர்த்திருப்போம் தானே?’’ என்றார். 

சிரித்துக் கொண்டே மன்னர் தன் பையில் இருந்த காசை எடுத்து அவரிடம் கொடுத்தார். அந்தக் காசின் இரு பக்கமும் தலையே அச்சாகி இருந்தது. 

ஒரு தொழில்முனைவருக்கு தொழிலைத் தொடங்குகி றபோது அதில் தாம் எப்படியும் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட, தம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நம்பச் செய்ய வேண்டிய பொறுப்பும் உண்டு. 

அரசர் தளபதிகளின் மனதை போருக்குத் தயார் படுத்தியது போல ஒரு தொழில்முனைவரும் தம்மை நம்பி இருக்கக் கூடிய மனைவி, குழந்தைகள், தமது பெற்றோர், மனைவியின் பெற்றோர் போன்றோரை முதலில் நம்பச் செய்ய வேண்டும். 

பிறகு தொழிலில் முதலீடு செய்யப்போகும் முதலீட்டாளர்கள், கடன் தரும் வங்கிகள், பொருள் வழங்கும் சப்ளையர்கள், ஆர்டர் தரும் வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை வரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 

ஒருவர் எந்த அளவிற்கு தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றி தன் மீதான நன்மதிப்பை உயர்த்திக் கொள்கிறாரோ அந்த அளவிற்கு அவரால் பிறரின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற முடியும். 

                                                 —– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker

 

 

Comments are closed.