பணம் இல்லாமலும் செய்ய சில தொழில்கள் உள்ளன. இது சாத்தியம்தானா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். நாம் தொழில் என்று நினைத்தவுடனேயே ஒரு பெரிய கடை
… அதில் ஏகப்பட்ட பொருட்கள்… வேலை பார்க்க நான்கு பேர்… புழக்கத்திற்கு கை நிறைய பணம்… இப்படியாகவே நமது கற்பனை இருக்கும்.
எந்தப் பொருளுமே இல்லாமல் எந்த மூலதனமுமே இல்லாமல் தொடங்கக்கூடிய தொழில்கள் நாட்டில் ஏராளமாக உள்ளன. ஒரு காய்கறிச் சந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு லாரியிலிருந்து மூட்டைகளை இறக்குவதற்கு ஒரு ஒப்பந்தக்காரர் இருப்பார். அவர், ஒரு வேலையை எடுத்து, அதில் நான்கு கூலி ஆட்களிடம் கொடுத்து பணம் பண்ணுவார்.
அதே சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் தரகர் இருப்பார். அவர் காய்கறி மூட்டைகளை ஒரு குறிப்பிட்ட விலைக்குப் பேசி அதை விட சிறிது லாபம் அதிகம் வைத்து மற்றவர்களிடம் விற்பார்.
கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று டெலிவரி செய்வதற்கு வாகனம் பேசிவிட மற்றொரு தரகரும் அங்கே இருப்பார்.
இது மாதிரி ரியல் எஸ்டேட், திருமணத் தரகர் போன்ற தரகுத் தொழில்கள், ஆட்டோமொபைல் ஆலோசனை, நிதி ஆலோசனை போன்ற ஆலோசனைத் தொழில்கள், இன்சூரன்ஸ், சிட்ஃபண்ட் போன்ற முகவர் தொழில்கள், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற படிப்பு சார்ந்த தொழில்கள்… இவை அனைத்துமே வீட்டிலிருந்தவாறே மேற்கொள்ளலாம். இவற்றுகு பெரிய முதலீடு எல்லாம் தேவையில்லை. ஒரு செல்பேசியும், ஒரு பைக்கும் போதும். பேச்சில் இனிமையும், வாயில் உண்மையும், செயலில் வேகமும், கொடுக்கல் –வாங்கலில் நேர்மையும் இருந்தால் முதலீடு இல்லாத தொழில்களில் சிறந்து விளங்க முடியும்.
எல்லாத் தொழில்களிலும், மொத்த வருமானத்தில் அதிகபட்சமாக 5 விழுக்காடு தொகை வாராக் கடனாக இருக்கும். இந்த விகிதத்தை விட அதிகமாக உங்கள் வாராக்கடன் இருந்தால் நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு தொகையும் பில் போடப்பட்ட மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக வசூலிக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களைக் கடந்தும் நிலுவையில் இருக்கக் கூடிய தொகை, பிறகு வாராக் கடனாக மாறிவிடுகிறது.
வாராக் கடன்களைக் குறைப்பதற்கு, வேலையைத் தொடங்கும் முன்பே ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாகப் பெற்றுவிட வேண்டும். அல்லது பின் தேதியிட்ட காசோலையாக முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம். பில் போட்டு 6 மாதங்கள் கழித்தும் வராமலிருக்கும் தொகையை ஏழாவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே திரும்பத் திரும்ப நினைவூட்டி பெற்றுவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்தும் அப்பணம் வராவிட்டால் நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு தொழிலில் போட்ட மூலதனத்தை திரும்ப எடுப்பதற்கான காலகட்டத்தை ஆங்கிலத்தில் ‘பிரேக் ஈவன்’ (Break Even) என்பார்கள். தொழிலில் நீங்கள் செய்திருக்கும் முதலீடுகள் அனைத்தையும் எப்போது வெளியில் எடுக்கிறீர்களோ அல்லது உங்கள் தொழிலானது எல்லாச் செலவுகளையும், முதலீடுகளையும் மீறி எப்போது லாபம் தரத் தொடங்குகிறதோ, அதுதான் பிரேக் ஈவன் பாயின்ட் ஆகும்.
பிரேக் ஈவன் என்பது தொழிலுக்குத் தொழில் மாறுபடும். இருப்பினும் சராசரியாகப் பார்க்கையில் பிரேக் ஈவன் காலகட்டம் என்பது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாகும். குறைந்த முதலீடு உள்ள தொழில்கள் வெகு விரைவில் பிரேக் ஈவன் நிலையை அடையும். முதலீடுகளை அதிகரிக்க, அதிகரிக்க பிரேக் ஈவன் கால கட்டம் தள்ளிப்போகும். சான்றாக, அதிக முதலீடு செய்யப்பட்ட பெப்சி, கோக கோலா போன்ற நிறுவனங்கள் எல்லாம் பல ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பிரேக் ஈவன் நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—– இராம்குமார் சிங்காரம், Tamil Entreprenuerial Speaker