உலகை உருவாக்கிய இறைவன் மனிதர்களுக்கு தண்ணீர், காற்று, வெப்பம், காய், பழம் என அனைத்து வசதிக ளையும் உருவாக்கிக் கொடுத்தான்.
இவர்கள் இதற்கெல்லாம் சிரமப்படாமல், உற்சாகமாக வாழ்ந்து புதியனவற்றை உருவாக்க வேண்டும் என அவன் கனவு கண்டான்.
தன்னுடைய கனவு நிறைவேறியிருக்கிறதா என்பதைக் காண, ஐம்பது ஆண்டுகள் கழித்து பூமியைப் பார்வையிட வந்தான். மக்கள் எல்லோரும் சோம்பேறிகளாய் இருப்பதைக் கண்டு வருத்தமுற்றான்.
இதர்கான காரணத்தைக் கண்டறிய அங்கே இருப்பவர்களிடம் பேசத் தொடங்கினான்.
முதலாவனைச் சந்தித்தபோது ‘எனக்கு வயதாகிவிட்டது, இனி நான் உழைந்து என்ன ஆகப் போகிறது” என்றான்.
இரண்டாமனோ, “இயற்கை வளங்கள் இருக்கின்றன. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை, பிறகு ஏன் உழைக்க வேண்டும்?” என்றான்.
“எல்லோரும் உழைக்கவில்லை. அதனால் நானும் உழைக்கப் போவதில்லை” என்றான் மூன்றாமவன்.
வெறுத்துப்போன இறைவன், மிகுந்த யோசனைக்குப் பிறகு மனிதர்களிடம் இருந்த முடியாது; ‘இயலாது; செய்யமாட்டேன், யோசிக்கமாட்டேன்; போதிய வசதில்லை என்பன போன்ற எதிர்மறைச் சொற்களையெல்லாம் நீக்கிவிட்டான். இதனால் மனிதர்கள் பாசிட்டிவாக சிந்திக்கத் தொடங்கினர். பூமியும் வளம் பெற்றது.
ஆம்! நம்மிடமும் நிறைய திறமைகள் இருந்தும், வாய்ப்புகள் இருந்தும், இயலாது – முடியாது என்று நம்மை நாமே இயங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறோம். இந்த எதிர்மறை சொற்களை நம்மிடம் இருந்து நீக்கிவிட்டால், நம்மாலும் ஜெயிக்க முடியும்.
இன்று ஒரு நாள் மட்டுமாவது நீங்கள் உங்களுக்குள்ளும், பிறரோடும் பேசுகிற பேச்சினை கூர்ந்து கவனியுங்கள். அதில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு பத்து முறையாவது எதிர்மறை சொற்களை பயன்படுத்துவதை நீங்கள் உணரலாம். இவைதான் உங்களை வெற்றி பெறாமல் தடுக்கச் செய்கிற தடைக்கற்கள்.
டிஜிட்டல் கேமரா கண்டுபிடிப்பதற்கு முன்புவரை போட்டோ கிராபர்கள், தாம் போட்டோ எடுத்த பிறகு நெகட்டிவை கழுவி பாசிட்டிவாக்குவார்கள். நெகட்டிவையெல்லாம் பாசிட்டிவாக்குகிற இந்த சிந்தனையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் போதும்.
பாசிட்டிவாகச் சிந்திப்பதால் அப்படி என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். இதோ அந்தக் கேள்விக்கான பதில்…
பல அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய பிரபல விஞ்ஞானியை ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்டார். அவரால் மட்டும் எப்படி மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து ஆக்கபூர்வமாக செயலாற்ற முடிகிறது என்று கேட்டதற்கு அவ்விஞ்ஞானி தனது சிறு வயதில் ஏற்பட்ட அனுபவமே பிந்தைய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறினார்.
அதாவது, தனது மூன்றாவது வயதில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு பால் பாட்டிலை எடுக்க அவர் முயற்சி செய்தபோது கை தழுவி பாட்டில் கீழே விழுந்து உடைந்து தரை முழுவதும் பால் சிந்தியிருக்கிறது.
உள்ளே வந்து பார்த்த அவரின் தாயார் அவரைத் திட்டவோ, சத்தம் போடவோ இல்லை. மாறாக ‘என் மகன் எவ்வளவு அழகானதொரு குளத்தை செய்திருக்கிறான்” என்று கூறி சிரித்தார்.
மேலும் “தான் இவ்வளவு பாலை, தரையில் ஒரு சிறு குளம் போல் பார்த்ததேயில்லை. ஏற்கெனவே சிந்தியாகிவிட்டது. அதைத் தடுக்க நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது. சிந்திய பாலில் விளையாட உனக்கு விருப்பமா? சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்புறம் சுத்தப்படுத்தி விடலாம்” என்று சொன்னார்.
சிறிது நேரம் சேர்த்து அவருடன் விளையாடி மகிழ்ந்தவர், ‘நாம் இதுபோல் சிறு தவறு செய்யும்போது அதை சரி செய்யும் கடமையும் நமக்கு இருக்கிறது. இதைச் சுத்தப்படுத்த வேண்டியது உனது கடமை. சுத்தப்படுத்த ஸ்பாஞ்ச் வேண்டுமா அல்லது டவல் வேண்டுமா?” என்று கேட்டார்.
பாலை சுத்தப்படுத்த அவரும் உதவினார். பின்னர் அவரது தாய் அவரிடம், ‘நீ ஒரு பால் பாட்டிலை கையிலெடுக்கத் தெரியாமல் தவறவிட்டாய், நாம் இப்போது அதை சரியாகச் செய்வது எப்படி என்று பயிற்சி எடுப்போம்” என்று சொன்னவர், இவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கீழே தூக்கப் பயிற்சி கொடுத்தார்.
பால் கொட்டி, எதிர்மறையாக ஏற்பட்ட ஒரு சூழலை பாசிட்டிவாக அணுகிய அந்த சிறு வயது அனுபவம். அவ்விஞ்ஞானிக்கு வாழ்வில் ஒரு பெரிய பாடமாகவும் பிற்கால வெற்றிகளுக்கு அடித்தளமாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் உங்கள் முன் இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படும்.
‘என்னால் முடியாது‘ என்ற நெகட்டிவ் சிந்தனையோடு புலம்பி கொண்டே இந்த உலகை எதிர்கொள்ளப் போகிறீர்களா? அல்லது ‘என்னால் நிச்சயம் முடியும்‘ என்ற பாசிட்டிவ் சிந்தனையோடு உற்சாகமாக, இந்த உலகை எதிர்கொள்ளப் போகிறீர்களா?
இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை அமையும்!
—————— இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu