தவணை முறையில் பொருட்களை வாங்கலாமா? என்பது நடுத்தரக் குடும்பம் தொடங்கி, சிறு நிறுவனங்கள் வரை பலருக்கும் எழும் குழப்பம்.
நாம் சில பொருட்களை வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு அவற்றை ரொக்கம் கொடுத்து வாங்குவதா? என்பதை முடிவெடுக்க வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும்முன், வாங்கும் பொருட்களின் தன்மையை விற்பனைக்காக வாங்குவது, பயன்பாட்டுக்காக வாங்குவது என இரு விதமாகப் பிரிக்கலாம்.
விற்ப்பனைக்காக வாங்கும்போது பொருட்களை ரொக்கத்துக்கு வாங்குவதே சாலச் சிறந்தது. நாம் அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்குவதால் குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். ஆனால் பயன்பாட்டுக்காக இயந்திரங்கள், கருவிகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கத் திட்டமிட்டால் அவற்றின் தேவையைப் பொறுத்து, தவணை முறையில் வாங்குவது குறித்துத் திட்டமிடலாம்.
தவணை முறையில் வாங்குவது என்று முடிவு எடுத்து விட்டால், மீண்டும் வருமானம் தரக்கூடிய பொருட்கள், வருமானம் தராத பொருட்கள் என்கிற இரண்டு நோக்கங்களின் அடிப்படையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, முன்பு கிடைத்த வருமானத்தை விட இந்தப் பொருளை, இயந்திரத்தை, கருவியை, வாகனத்தை வாங்குவதால் வருமானம் அதிகரிக்கும் என்றால் அவற்றை தவணை முறையில் கொள்முதல் செய்யலாம். ஏனெனில் கூடுதலாகக் கிடைக்கிற வருமானத்தில் இருந்து நீங்கள் வட்டித் தொகையைச் செலுத்த முடியும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு அச்சகம் வைத்திருக்கிறீர்கள். கூடுதலாக டி.டி.பி யூனிட்டையோ, கட்டிங், பைண்டிங் கருவிகளையோ வாங்கினால் அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானத்தைக் கொண்டு வட்டியைக் கட்டிவிட முடியும்.
ஆனால், அதேசமயம், ஒரு கலர் டி.வி யையும், ஏ.சி. யையும் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதனால் அந்த அச்சகத்தின் வருமானம் எள்ளளவும் உயரப் போவதில்லை. ஆனால், பொருளை வாங்கிய அடுத்த மாதத்திலிருந்து அவர் வட்டியும், அசலும் செலுத்தியாக வேண்டும். இதனால் அவருக்கு செலவு அதிகரிக்கும். எனவே, வருமானம் தராத பொருட்களை தவணை முறையில் வாங்கக்கூடாது. ரொக்கக் கொள்முதலே வட்டிச் செலவைத் தவிர்க்கும்.
தவணை முறையில் வாங்குவதால் வேறென்ன நன்மைகள் கிடைக்கும்…?
சிலர் ரொக்கம் கொடுத்து பொருட்கள் வாங்குவதை வேறு மாதிரியாகவும் சிந்திக்கக்கூடும். அதாவது பணத்தை கருவிகள் / வாகனங்களில் முதலீடு செய்வதால் வரிச் சலுகை குறைவாகவே கிடைக்கும். மொத்த முதலீட்டில் அதிகபட்சம் 25 சதவீதம் அளவே தேய்மானச் செலவு எழுதி, வரிச் சலுகையை அவர்கள் பெற முடியும். மீதி 75 சதவீதத்துக்கு வரி செலுத்தியாக வேண்டும்.
ஆனால் தவணை முறையில் பொருட்களை வாங்குகின்ற போது அவர்கள் செலுத்தும் தவணைத் தொகையை (வட்டி மற்றும் அசல் இரண்டையும்) செலவாகக் காண்பித்து வரிச் சலுகை பெற முடியும். மேலும் தவணை முறையில் பொருட்களை வாங்கினால் பெரும் தொகையை முடக்கத் தேவையில்லை. அவற்றை வணிகத்தில் முதலீடு செய்து கூடுதலாகப் பணம் ஈட்டலாம்.
எனவே, பொதுவாக அதிகப் பணம் கொடுத்து பயன்பாட்டிற்கு எனப் பொருட்களை வாங்கும்போது, கணக்குத் தணிக்கையாளரிடம் (ஆடிட்டரிடம்) ஒருமுறை கலந்து ஆலோசித்துவிட்டு, பிறகு வரிச் சலுகையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுப்பது நல்லது.
0% வட்டி என்று வியாபாரிகள் கூற்று உண்மைதானா?
பொருள் வாங்குகிற போது சில நேரம் 0 % வட்யை வழங்குவதாக விநியோகிஸ்தர்கள் சொல்வதுண்டு. அப்படி சொன்னால் முழு விவரங்களையும் பெற்று, ஒருமுறைக்கு இருமுறை கணக்கிட்டுப் பார்க்கவும்.
கடன் வாங்கும்போது பிராசஸிங் கட்டணம் (Processing Charges), முன்கூட்டியே கட்ட வேண்டிய முதல் தவணைத் தொகை (Prepaid First Instalment), மாதாந்திர தவணைத் தொகைகள் (Monthily Instalment), என மூன்று வகையாக, கடன் தரும் நிறுவனங்கள் பணத்தை வசூலிக்கும்.
நீங்கள் ரூ. 3 லட்சம் பெறுமானமுள்ள ஒரு காருக்கு ரூ. 1.20 லட்சத்தை ஒரு நிறுவனம் 0% வட்டிக் கடனில் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் முதலில் ரூ.2,400- ஐ (ரூ .1.20 லட்சத்தில் 2%) பிராசஸிங் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளும். (சில இடங்களில் டாக்குமெண்டேஷன் என்ற பெயரில் 1% கட்டணம் கூடுதலாக வசூலிப்பதும் உண்டு). பிறகு. ரூபாய் 12,000 மதிப்புள்ள 10 காசோலைகளை கேட்கும். அதில் ஒரு காசோலை அன்றைய தேதியிட்டதாக இருக்க வேண்டும்.
ஆக ரூ 1.08 லட்சத்தை 9 மாதக் கடனாக பெறுகிறீர்கள். அதற்கு ரூபாய் 2,400 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்துகிறீர்கள். கட்டணம் என்ற பெயரில் செலுத்தினாலும் அந்தச் செலவும் ஒரு வகையில் வட்டியே. கணக்குப் பார்க்கும்போது, நீங்கள் தோராயமாக 3 சதவீதம் தொகையை வட்டியாகச் செலுத்துகிறீர்கள் என்பதே உண்மை.
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, 0% வட்டி என்பது உண்மையில் 0% வட்டி அல்ல, அதிலும் 3% மறைமுக வட்டி அடங்கி இருக்கிறது. பொதுவாக, நிதிநிறுவனங்கள் வாகனங்களுக்கு வழங்கும் 9 சதவீத வட்டியை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவே என்றாலும் கூட, நீங்கள் வட்டி செலுத்துகிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
ஒரு சிறிய கண்ணாடித் தொட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் நீரை ஊற்றி கால் தொட்டி அளவிற்கு நிரப்புங்கள். பிறகு கால் தொட்டி அளவு மணலை நிரப்புங்கள். மற்றொரு கால் தொட்டி அளவிற்கு சிறிய சிறிய கூழாங்கற்களை நிரப்புங்கள். மீதமுள்ள இடத்தில் பெரிய கூழாங்கற்களைப் பரப்புங்கள். பெரிய கற்கள் மட்டும் சரியாக நிரம்பாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
மாறாக இச்செயலையே தலைகீழாகச் செய்து பாருங்கள். அதே கண்ணாடிப் பெட்டியில் முதலில் பெரிய கூழாங்கற்களையும், பிறகு சிறிய கற்களையும் நிரப்புங்கள். சிறிய கூழாங்கற்கள் பெரிய கூழாங்கற்களுக்கு நடுவே உள்ள இடைவெளியில் சென்று அமர்ந்துகொள்ளும். அடுத்ததாக மணலை உள்ளே நிரப்புங்கள். அவை பெரிய மற்றும் சிறிய கூழாங்கற்களுக்கிடையே தன்னை நிரப்பிக் கொள்ளும். இறுதியாக தண்ணீரை ஊற்றுங்கள். இப்போது அதே தொட்டியில் இன்னும் கொஞ்சம் இடம் இருப்பதை நீங்கள் காணலாம்.
நம் தொழிலில் ஏற்படும் செலவினங்களும் இப்படித்தான்.! பெரிய செலவினங்களை நாம் பட்டியலிட்டு அவற்றுக்கென நிதியை ஒதுக்கி விட்டால் சிறிய செலவுகளை ஓரளவு நாம் சமாளித்துக் கொள்ளலாம்.
—– இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu