கோயிலுக்குப் பக்கத்தில் மதுக்கடை திறந்தால், கொந்தளித்துப் போவார்கள் என்பது அறிந்ததே!
மதுக்கடை லைசென்ஸ் பெற்ற ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
வேறு பொருத்தமான இடம் கிடைக்காததால், ஊராரின் எதிர்ப்பை மீறி, கோயிலை ஒட்டி கடை திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். தினமும் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. கடை வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
அந்த மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரும் விண்ணப்பங்கள் அனுப்புவதன் மூலம் மதுக்கடை திறப்பதைத் தடுக்க கோயில் பக்தர்கள் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன், தினமும் பிரார்த்தனையும் செய்தனர்.
என்றாலும், மதுக்கடை திறப்பதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து, மறுநாள் காலையில் கடை திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், கொளுத்தும் வெயில் தகித்த கோடைக்காலத்தில், திடீரென கனமழை.
இடியும் மின்னலும் கலந்து பிரவாகமாக இருந்தது. அந்த ஊரில் மட்டுமே மழை என்பது பலருக்கும் ஆச்சர்யம் ஒரு பலத்த மின்னல் தாக்கி அந்த மதுக்கடை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
அதற்குப் பிறகு கோயில் பக்தர்கள் எல்லாம் தங்களை பெருமையாகவே பார்த்துக் கொண்டனர். கோயில் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டதாக பக்தர்கள் பேசிக் கொண்டனர். தவறு செய்ய நினைத்தவனுக்கு ஆண்டவன் தகுந்த கூலி கொடுத்து விட்டதாகவும், இனியாவது திருந்தி, நல்ல தொழில் செய்து பிழைக்குமாறும், வாய்த் துடுக்கு கொண்ட சிலர் மதுக்கடை உரிமையாளரிடம் நேரடியாகவே கூறினர்.
பொருளை இழந்ததோடு, ஊரார் வாய்ச் சொல்லும் சேர்ந்ததால் கோபம் கொண்ட மதுக்கடை உரிமம் பெற்றவர்,
“தனது கடை அழிக்கப்படுதற்கு ஊர்க்காரர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம்.. இறைவனை வற்புறுத்தி எனது கடையை அழித்த அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! இழந்த தன் சொத்தை அவர்களிடமிருந்து வசூலித்துத் தர வேண்டும்” என்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான்.
ஊர்க்காரர்கள் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பதிலில் மதுக்கடை ஆழிவிற்குத் தாங்கள்தான் பொறுப்பு என்பதை பலமாக மறுத்தனர். “கடை இங்கு வராமல் இருந்தால் நன்றா இருக்குமே என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தது உண்மை. ஆனால், கடையின் அழிவு இயற்கையால் ஏற்பட்டது. அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறினார்கள்.
வழக்கு நடந்து கொண்டே இருந்தது. தீர்ப்பு நாளும் வந்தது. நீதிபதியோ, “ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்த்த நான், இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு கூறப் போகிறேன் என்றே தெரியவில்லை. இந்த வழக்கின் ஆவணங்களில் இருந்து நமக்குத் தெரிய வருவதெல்லாம் ஒன்றுதான். கடவுள் நம்பிக்கையற்ற மதுக்கடைக்காரர் பிரார்த்தனையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதேசமயம், பக்தர்கள் அனைவருக்கும் தங்களின் பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை என்பதும் புரிய வருகிறது…” என்றார்.