fbpx
ஆப்பிள் அம்மா! | Being Grateful

motivational speaker in tamil nadu
  • September 30, 2023

சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம். இனிப்பான கனிகளைத் தந்து ஏக்கர் கணக்கில் பிரமாண்டமாக விரிந்திருந்த அம்மரத்துடன் விளையாடுவது சிறுவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

மரத்தின் கிளைகளில் ஏறி, தினம் தினம் தனது உடல் வலிமையை அவன் வளர்த்துக் கொண்டான். சிறுவன் களைப்படையும் போதெல்லாம், தன்னிடம் இருக்கும் கனிகளை உதிர்க்கச் சொல்லி அவனுக்கு தெம்பூட்டும் அந்த மரம். அவன் ஒருநாள் தன்னுடன் விளையாட வராவிட்டாலும் மரம் ஏங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போனது. சிறுவன் வளர்ந்தான். மேல்படிப்பு காலம் வந்தது. படிப்புச் செலவுக்கு பணம் இல்லையே!’ என்ற வாட்டத்தோடு தோட்டத்துப் பக்கம் வந்தான். மரம் அவனை அழைத்தது. பிரச்னையைக் கேட்டது. ‘இவ்வளவுதானா…? நான் விளைவித்திருக்கும் கனிகளை எல்லாம் உலுக்கி உதிர்த்து விடு. நான் வேகமாக புதிய கனிகளை உற்பத்தி செய்கிறேன். ஒரு வாரத்தில் உன் பணத்தேவையை இப்பழங்கள் பூர்த்தி செய்யும்…’ என்றது. சிறுவன் அப்படியே செய்து, படிப்புக்குப் பணம் கட்டி விட்டான்.

நாட்கள் நகர்ந்தன. இளைஞனுக்கு நல்ல வேலை கிடைத்து, சம்பாதிக்கத் தொடங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. கடைசி நேரத்தில் பணப்பிரச்னை எழ.. எப்போதும் தனக்குஆறுதலாக இருக்கும் ஆப்பிள் மரத்தை நோக்கி நடந்தான் இளைஞன். ‘கல்யாண மாப்பிள்ளை கலங்கலாமா…? எனது இடது பக்க கிளைகளை வெட்டி எடுத்தால், பல லாரி மரம் கிடைக்கும். அதைக் கொண்டு ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்! என்றது மரம்.

நல்லபடியாகத் திருமணம் முடிந்தது.

காலம் கடந்தது. இளைஞனுக்கு இரு பிள்ளைகள். அவர்களுடன் வந்து ஆப்பிள் மரத்துடன் விளையாடுவான் இளைஞன். இந்நிலையில் அவனது மனைவிக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அறுவை காரண சிகிச்சைக்கு பெரும் செலவு. கையைப் பிசைந்த நிலையில், மரம் புதியதொரு யோசனை சொன்னது. ‘வலது பக்க கிளைகளை வெட்டி எடுத்துச் செல்! இளைஞனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை கண்கள் பணிக்க, ஒப்புக் கொண்டான். மனைவி பிழைத்தாள்.

இந்நிலையில், இளைஞனுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து, அவன் அங்கேயே சென்று சில வருடங்கள் சென்று பணியாற்றினான் கைநிறைய சம்பளம். வசதி வாய்ப்பு. குழந்தைகளுக்கு நிறைய பரிசுப் பொருட்களோடு வந்திறங்கினான். மகிழ்ச்சியான வாழ்க்கை இறைவனுக்கு நன்றி சொன்னபடியே தோட்டத்துப் பக்கம் போனால் கிளைகளற்று நின்ற மரம் லேசாகப் பட்டுப் போகத் தொடங்கியிருந்தது. பராமரிப்புக்கான அறிகுறியும் இல்லை. மெதுவாக அதன் அருகில் போனான். ஆப்பிள் மரத்திடம் லேசான சிலிர்ப்பு. ‘கண்ணா! வந்து விட்டாயா.? எத்தனை நாளாயிற்று உன்னைப் பார்த்து” என்றது. “எப்படி பூத்துக் குலுங்கிய நீ இப்படி கட்டை மரமாகி விட்டாயே எனக்காக உன்னையே நீ இழந்து விட்டாயே!” என்று கண்ணீர் சிந்தினான் இளைஞன். “அதனால் என்ன… நீ என்னுடன் விளையாட வந்தால், அதுவே போதும் இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்.!” என்றது மரம்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோரும் நமது வளர்ச்சிக்கு உதவியவர்களும் இப்படித்தான் தன்னலம் இன்றி இருக்கின்றனர். அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்த்து, அவ்வப்போது சந்தித்து வத்தாலே அதைவிட சிறந்த ஆசீர்வாதம் ஏதும் இருக்காது.

– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu

Comments are closed.