தொழில் தொடங்குவதற்கென்று வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்த வயதினர் தொழில் தொடங்கினால் வலுவான உடல்
அமைப்பின் காரணமாக நாள்தோறும் நீண்ட நேரம் உழைக்க முடியும். வயதானோர் தொழில் தொடங்கினால் அவர்கள் பெற்ற அனுபவத்தின் காரணமாக பல இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி சிறப்புற தொழில் நடத்தலாம்.
பளிச்சென்று சொல்வதானால், தொழில் தொடங்க வயது ஒரு தடையே அல்ல… அந்தந்த வயதுக்குரிய பலம், பலவீனங்களை அறிந்திருந்தாலே போதும்.
இன்றைக்கு உள்ள இளைய சமுதாயத்தினர் தொழில் தொடங்கிய அடுத்த ஆண்டே அம்பானியாகவும், பில் கேட்ஸ் ஆகவும் உயர ஆசைப்படுகின்றனர். அம்பானியும், பில்கேட்ஸ்சும் தொழில் தொடங்கி புகழ் அடைவதற்கு பல ஆண்டுகள் ஆனது என்பதை அவர்கள் உணர்வதில்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் குறுகிய காலத்திற்குள் எப்படி யேனும் முன்னேறி விடவேண்டும் என்கிற எண்ணம்தான் தவறு.
இரவோடு இரவாக வரும் எந்த வளர்ச்சியும் நிலைத்திருக்க முடியாது. வானுயரப் பறக்கும் இலைகள் காற்று நின்ற உடன் கீழே விழுந்து விடும். ஆனால் வேர்விட்டு காலம் காலமாக வளர்ந்து வரும் மரங்களோ, புயல் காற்றையும் தாங்கி நிற்கும் என்பதை மனதில் இருத்த வேண்டும்.
வயதானோர் தொழில் தொடங்குகின்றபோது பொதுவாக பழைய சித்தாந்தத்திலேயே அவர்கள் பழகி வந்திருப்பதால் புதிய சிந்தனைக்கு அவர்களது மூளை இடம் கொடுக்காது. தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளரின் மாறி வரும் தேவைகள், அடுத்த 10 ஆண்டுகளில் தொழில் போகும் பாதையின் தொலைநோக்கு போன்றவற்றில் அவர்களது சிந்தனையை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
குறைவாக சம்பளம் கொடுத்து அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து தொழில் நடத்திய பாணி அந்தக் காலம். தற்போது கூடுதல் சம்பளம் கொடுத்து குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் பாணி நடப்பில் உள்ளது. இப்படி மாறி வரும் தேவைக்கேற்ப தங்களது சிந்தனைகளையும் மாற்றிக் கொள்வது அவசியம்.
வயதைப் போலவே குழப்பம் ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் திருமணத்திற்கு முன்பே தொழில் தொடங்கலாமா… அல்லது திருமணத்திற்கு பின்பா?
தொழில் என்பதே ஒருவகையில் ரிஸ்க் எடுக்கும் முயற்சிதான். திருமணத்திற்கு முன்பு நாம் இந்த ரிஸ்கை எடுக்கின்ற போது மனைவி, குழந்தைகள், குடும்ப நிகழ்ச்சி, உற்றார், உறவினர் வருகை போன்ற குடும்பம் சார்ந்த நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கும் அவசியம் இருக்காது. மேலும் நமக்கான பணத் தேவையும் குறைவாகவே இருக்கும். இதனால் தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியும்.
இன்னும் சொல்லப்போனால், நாம் எடுக்கும் ரிஸ்க் நம்மோடு முடிந்துவிடும். யாரையும் பாதிக்காது. தொழிலில் ஏதாவது சறுக்கல் ஏற்படுமானால், நம்முடைய பிஸினஸ் மாடலை மாற்றி மீண்டும் முயற்சித்துப் பார்க்க கால அவகாசமும் கிடைக்கும்.
இப்படி எல்லாம் சொல்வதால், திருமணத்திற்கு பிறகு தொழில் தொடங்கக் கூடாது என்பதில்லை. பெரும்பாலானோர் திருமணத்திற்குப் பிறகே தொழில் தொடங்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அவர்களுக்கு தொழிலில் முதலீடு செய்வதற்கான பணமும், அனுபவமும் அவர்கள் பல காலம் கஷ்டப்பட்டு உழைத்த பிறகே கிடைக்கிறது.
இதுபோன்ற தருணங்களில் குடும்பத்திற்குத் தேவைப்படும் செலவுகளைப் பட்டியலிட்டு குறைந்தபட்சம் ஆறுமாதத் தேவைகளுக்கான பணத்தை இருப்பில் வைத்துவிட்டோ அல்லது ஒதுக்கி வைத்துவிட்டோ மீதமுள்ள பணத்தில் தொழில் தொடங்கலாம். தொழில் தொடங்கிய புதிதில் நமக்கென்று சம்பளம் எதையும் எடுக்க முடியாது என்பதாலேயே குடும்பச்செலவுகளுக்கு தொகை ஒதுக்குவது அவசியமாகிறது.
ஆக… நாம் தலைப்பில் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால், திருமணத்திற்கு முன்பு தொழில் தொடங்குவது பாதுகாப்பானது. திருமணத்திற்குப் பின்பு தொடங்கினால், குடும்பத்தின் மாதாந்திர செலவுகளுக்குக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிட்டுத் தொடங்குவது நல்லது.