fbpx
முதலாளியாக  அடிப்படை  ஃபார்முலா | Basic Formula to be a Business Owner

to be a business owner - Best tamil motivational speaker
  • September 23, 2021

பொதுவாக எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கும் எந்த ஒரு நிகழ்வுமே அதிர்ச்சி தரும். அதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க முடியாது. அந்த நிகழ்வு நல்லதாக இருந்தாலும் சரி; தீயதாக இருந்தாலும் சரி, இதுதான் யதார்த்தம். நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கணக்கிட்டு, எல்லாவற்றுக்கும் நாம் தயாராக இருந்தால், அதிர்ச்சிக்கே வாய்ப்பில்லை. 

 ஒரு தொழிலைத் தொடங்கும்போது நான்கு வகையான முடிவுகள் ஏற்படலாம். 

  • எதிர்பார்த்த சரியான வளர்ச்சி, 
  • எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சி, 
  • எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்காமல் போவது, 
  • படுமோசமான தோல்வி 

இந்த நான்கு நிகழ்வுகளுக்கும் தொழில் முனைவோர் தங்களைத் தொடக்கத்திலேயே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்து ஒரு பல்பொருள் அங்காடியைத் தொடங்குகிறீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு ஆண்டிற்கு ரூ.20 லட்சத்திற்காவது வியாபாரம் [டர்ன் ஓவர்] நடக்க வேண்டும். என்பது தான் ரூ.20 லட்சம் என்பதை 100% வளர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம் 

 ஆண்டின் முடிவில் நீங்கள் கணக்குப் பார்க்கும்போது 4 நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அதாவது, நீங்கள் எதிர்பார்த்தபடியே ஆண்டிற்கு ரூ.20 லட்சம் தொழில் நடந்திருக்கலாம்; அல்லது அதிகமாக, அதாவது ரூ.40 லட்சம் வரை வியாபாரம் நடந்திருக்கலாம்; அல்லது தொழில் சரியாக நடக்காமல் நட்டத்தை சந்தித்திருக்கலாம்; அல்லது நீங்கள் போட்ட கணக்குகள் எல்லாமே எதிர்மறையாக நடந்திருக்கலாம். 

 இவை நான்குக்கும் முன்கூட்டியே நம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தால், நம்மால் அடுத்த கட்ட முடிவுகளை எளிதில் மேற்கொள்ள முடியும். லாபம் வந்திருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. மாறக, தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தால் நாம் இன்னும் கூடுதலாக முதலீடு செய்து புதுமையான விற்பனை உத்திகளைக் கையாளலாம்; அல்லது ஸ்பென்சர்ஸ், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற வேறொரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தனி உரிமைக் கிளையாக இதனை மாற்றிக் கொள்ளலாம்; அல்லது வேறு ஒருவருக்கு இதனை விற்றுவிடலாம். 

இதுபோன்ற ஏதேனும் சில தீர்வுகளை நாம் முன்கூட்டியே பட்டியலிட்டு வைத்திருந்தால், தொழில் நஷ்டம் அடையும்போது அதிர்ச்சி அடைந்து திகைக்க மாட்டோம். இப்படி அடுத்தடுத்து உடனடியாக முடிவு களை எடுப்பதன் மூலம் தோல்வியைக்கூட நாம் அடுத்தடுத்த நிலைகளில் வெற்றியாக மாற்றிவிட முடியும். 

 இதுபோல் நாம் எதிர்பாராத அளவிற்கு வணிகம் பன்மடங்கு உயர்ந்து, ஆண்டிற்கு ரூ.40 லட்சம் அல்லது அதற்கும் மேல் வணிகம் நடந்தது என்றால், அதற்கும் நாம் அடுத்த கட்ட திட்டங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அதாவது இது போன்ற தொழிலை நகரின் பிற பகுதிகளில் உடனடியாகத் தொடங்கலாம்; அல்லது இருக்கின்ற கடையை இன்னும் விரிவாக்கி, கூடுதலான பொருட்களை விற்பனைக்கு வைக்கலாம். அல்லது இந்தத் தொழிலை தனி உரிமைக் கிளைகள் மூலம் நகரம் முழுவதும் விரிவுபடுத்தலாம். 

 இப்படி எல்லாவற்றுக்கும் நம்மை முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்டால் நாம் என்ன நிகழ்வு நடந்தாலும் அதற்கேற்ப முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்க முடியும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் திணற வேண்டி இருக்காது. 

 தொழிலில் பன்மடங்கு வளர்ச்சி இருந்தபோதிலும் அதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளாத காரணத்தால் வெற்றி வாய்ப்பை இழந்த நிறுவனங்களும் உண்டு. தொழில் நன்றாக நடந்தால் நட்டம் எப்படி ஏற்படும் என்கிறீர்களா..? இதோ ஒரு உண்மைக் கதையைப் பார்ப்போம். 

 குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் ஃபிரான்சைஸ் உரிமை பெற்று பயிற்சி மையம் ஒன்றை சென்னையில் சிலர் தொடங்கினார்கள். அந்நிறுவனம் 5 அல்லது 10 கிளைகளை ஒரு ஆண்டில் தொடங்கலாம் என எண்ணி, கிளைகளைத் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோரைத் தேடி விளம்பரம் வெளியிட்டது. 

 அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஒரே ஆண்டிலேயே 60-க்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப்பட்டன. இந்த வளர்ச்சியை அந்நிறுவனமே எதிர்பார்க்காத காரணத்தால், அவ்வளவு பயிற்சி மையங்களுக்கும் தேவைப்படும் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பாடபுத்தகங்களுக்கு சரிவர திட்டமிடவில்லை. 

மேலும் அதிக முதலீடு செய்து கிளைகளைத் துவங்கிய வர்களுக்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் முறையாக சேவை செய்ய இயலாத காரணத்தால், தொழிலை வளர்த்தெடுக்க கூடுதலாகத் தேவைப்பட்ட பணத்தைப் புரட்ட முடியாமல், நலிவடையத் தொடங்கியது. 

 ஒருவேளை, அந்தத் தொழில் முனைவோர் சந்தையை சரிவர கணித்து முன்கூட்டியே தம்மை 500% வளர்ச்சிக்குத் தயார்படுத்திக் கொண்டிருப்பார்களேயானால், அவ்வளர்ச்சிக்கு ஏற்றார்போல் பணத்தைப் புரட்ட முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள். தொழிலையும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி இருப்பார்கள். 

 எனவே நாலும் நடக்கலாம். என்ற என்னத்தில் முன் கூட்டியே தயாராவோம். அதிர்ச்சியோ, அதிசயமோ தொழிலுக்கு உகந்ததல்ல 

Comments are closed.