ஒரு மன்னனுக்கு தன் நாட்டில் பால் கிணறு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அந்தப் பால் கிணற்றை உருவாக்கினால்,
தன் புகழ் உலகெங்கும் பரவும் என்று எண்ணினான். ஏனெனில், அதுவரை அப்படி ஒரு கிணறு வேறு எங்கும் கிடையாது.
மந்திரிகளது ஆலோசனையின்படி, ஊரின் நடுவில் ஒரு பெரிய கிணற்றைத் தோண்ட உத்தரவிட்டான். கிணறு ரெடியானது; நாட்டு மக்கள் அனைவரையும் தலா ஒரு சொம்பு பாலைக் கொண்டு வந்து அன்று இரவு அக்கிணற்றில் ஊற்ற வேண்டும் என்று உத்தரவிட்டான்.
அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், எல்லோரும் பாலை ஊற்றுகிறபோது நான் மட்டும் ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றினால் மன்னனுக்குத் தெரியவா போகிறது? என்று எண்ணி, அன்று இரவு அக்கிணற்றில் ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றினான்.
மறுநாள் விடிந்தது. கிணறு முழுவதும் தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆம்! நாம் ஒவ்வொருவரும் தனியாக இயங்குகிறபோது விளைவு வெளிப்படையாகத் தெரியும் என்பதால், நாம் செய்கிற வேலையில் சரியாக இருப்போம். அதே நேரம், கூட்டமாகச் சேர்த்து ஒரு வேலையை செய்யச் சொன்னால், வேலை செய்ததாக கணக்குக் காண்பித்துவிட்டு தப்பித்துக் கொள்வோம்.
இது சராசரி மனிதர்களின் பொதுவான இயல்பு.
ஆனால், பணக்காரர்கள் அப்படி இயங்குவது கிடையாது. அவர்கள் குழுவிலும் சிறந்து இயக்கக்கூடியவர்கள்!
நீங்கள் பணம் ஈட்ட வேண்டுமானால், தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டியது அவசியம். தலைமைப் பொறுப்பு யாருக்கு வரும்? யார் ஒருவர் பிறர் கவனிக்காதபோதும் உழைக்கிறாரோ, தன் குழு வெற்றி பெறுவதற்கு உதவுகிறாரோ அவருக்கே அப்பதவி வரும்.
ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கை. உங்கள் முன்னேற்றத்திற்காக நீங்கள் வாழ்கிறீர்கள். பிறரோடு சேர்ந்து ‘கோவிந்தா’ போடுவதால், உங்கள் நேரத்தை வீணடிப்பதோடு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
நீங்கள் மனிதனாகப் பிறந்து விட்டால், சம்பாதித்தே தீர வேண்டும். சம்பாதிக்காத மனிதனை இந்த உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
இதே விஷயத்தை நாம் பாசிட்டிவாகக்கூட பார்க்கலாம். சம்பாதிப்பதை விட அப்படி என்ன பெரிய கடமை நமக்கு இங்கு இருக்கப்போகிறது? நம் வளர்ப்பும், படிப்பும், உழைப்பும் சம்பாத்தியத்தை நோக்கியே உருவாக்கப்பட்டிருப்பதால், பொருள் ஈட்டுபவருக்கே இந்த உலகம் சொந்தம்.
இப்போது சொல்லுங்கள். நீங்கள் கூட்டத்தோடு ‘கோவிந்தா‘ போடப்போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கி சம்பாதிக்கப் போகிறீர்களா?
மனிதனுடைய திறமை அளவிடற்கரியது. எதையும் சாதிக்கும் வல்லமை மனிதனுக்கு உண்டு.
ஒரு விஞ்ஞானி உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ரோபோட்டைக் கண்டுபிடித்தார். அந்த ரோபோட் பன்முகத் தன்மை கொண்டது. ஆடும், பாடும், சிரிக்கும், பேசும், நடக்கும், கம்ப்யூட்டரை இயக்கும், ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும், வாகனம் ஓட்டும்… இப்படி எல்லா வேலைகளையும் செய்யும் திறமை கொண்டது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பத்திரிகையாளர்கள். “அப்படியானால், இனி எதிர்காலத்தில் மனிதனுடைய வேலை வாய்ப்பெல்லாம் பறிபோய்விடுமா?” என்று கேட்டனர். அதற்கு அந்த விஞ்ஞானி, சிரித்துக் கொண்டே ‘ஆம்… உண்மைதான்! இந்த ரோபோட்டை விட, தாம் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை மனிதன் உணராதவரை” என்றார் கிண்டலாக.
ஆம்! நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட ரோபோட்டின் திறன் இருக்கிறது. இந்த அருமை தெரியாமல் கூட்டத்தோடு ஒருவராக நாம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம்.
விழித்துக் கொள்ளுங்கள்!
உழைக்கத் தொடங்குங்கள்!
————– இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu