fbpx
செலவும் ஒருவகை முதலீடுதான்! | Asset Liability Management

asset management
  • March 31, 2022
  • 1 Comment

செலவுகளும் சில சமயம் முதலீடாவது உண்டு. அவை எப்படியான செலவுகள்…? 

வருமானம் தராதஆனால், வருமானம் ஈட்டுவதற்கு அவசியம் தேவைப்படக்கூடிய செலவுகள் முதலீடு என்று கருதப்படுகிறது. நிலம், கட்டிடம், இயந்திரங்கள், சொத்துக்கள், கணிப்பொறிகள், நகல் எடுக்கும் கருவிகள், தொலைபேசிகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் இந்த வகை முதலீடுகளாகும். 

இவற்றுக்கு நாம் ஆண்டுதோறும் தேய்மானச் செலவு என ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவாக எழுதி, வருமான வரி தாக்கலின்போது செலவு கணக்கில் காட்டலாம். மற்றபடி தொழிலை நடத்த அன்றாடம் மேற்கொள்ளும் செலவுகளான சம்பளம், வாடகை, வட்டி, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்டவை பொதுச் செலவின வகையில் சேரும். 

பொதுவாக, செலவுகளில் கவனம் செலுத்துவதைப் போல் பல மடங்கு கவனத்தை முதலீடு செய்யும்போது செலுத்த வேண்டும். ஏனெனில், செலவு மாதந்தோறும் ஏற்படுவதால் இந்த மாதம் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் அதனை குறைத்துக் கொள்ளலாம். ஆனால், முதலீடு அப்படியல்ல கவனம் செலுத்தாவிட்டால் பெரிய நஷ்டத்தில்  போய் முடியும். இயந்திரம், கார் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் போது ஒரு முறைக்கு பலமுறை ஆலோசிப்பது நல்லது. 

தெரிந்த நண்பர் ஒருவர் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் சென்டருக்கு, பழைய கம்ப்யூட்டர்களை செகண்ட் ஹாண்டில் வாங்கினார். அவை இவர் எதிர்பார்த்த வேகத்தில் செயல்படாமல் பொறுமையைச் சோதித்து விட்டன. அவற்றை வைத்து அலுவலகத்தை நடத்துவதற்குள் படாதபாடுபட்டுப் போனார். கிட்டத்தட்ட கம்ப்யூட்டருக்காக அவர் செலவழித்த பணம் முழுவதும் கடலில் கரைத்த பெருங்காயமானது தான் மிச்சம். 

பெரிய முதலீடுகளை மேற்கொள்கின்றபோது முதலாவதாக அதற்கு காப்பீட்டுப் பாலிசிகளை எடுத்து விடுவது சாலச் சிறந்தது. கட்டிடம், இயந்திரம், கார் என எல்லாவற்றுக்கும் இன்று காப்பீட்டுத் திட்டங்கள் வந்துவிட்டன. முன்பைவிட அவர்கள் சேவையும் தற்போது சிறப்பாக உள்ளது. காப்பீடு செய்யும் போது ஒருசில இயற்கை இடர்களுக்கு மட்டும் காப்பீடு செய்யாமல் நிலநடுக்கும், தீ, திருட்டு, வெள்ளம், கலவரம் என அனைத்து இயற்கை இடர்களுக்கும் சேர்த்தே காப்பீடு எடுப்பது புத்திசாலித்தனம். 

பல ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்த மிகப் பெரிய மதக்கலவரத்தில் எண்ணற்ற கடைகள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை காப்பீடு செய்யாததால் அவற்றால் முதலீட்டைப் பாதுகாக்க முடியாமல் போனது. மேலும் 2004-ல் சுனாமி பாதிப்பின் போதும், 2015-ல் பெருவெள்ளத்தின் போதும் சில கடலோர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மீனவர்கள் படகுகளை இழந்து தவித்தனர். எனவே காப்பீடு மிக மிக அவசியம். 

அடுத்ததாக, முதலீடு செய்த பொருட்களுக்கு பராமரிப்பு மிக முக்கியம். பல லட்சம் முதலீடு செய்து வாங்கியவற்றை, சில ஆயிரங்கள் செலவழித்து பராமரிப்பதில் நம்மவர்களுக்கு ஆர்வம் இருக்காது.அட ஓடற வரைக்கும் ஓடட்டும்; சிக்கல் வரப்ப பாத்துக்கலாம் சார்!” என்கிற ரகம் தான் நம்மில் பலர். சிக்கல் வரும் முன் நீங்கள் செய்ய வேண்டிய செலவு 3% என்றால், சிக்கல் ஏற்பட்டு பின் செய்ய வேண்டிய செலவு 30% ஆகும். இதில் எது சிக்கனம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

                                                       ——  இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu

1 Comment
Photo
NELLAI KAVINESAN April 4, 2022

Very nice Sir