‘ படகை எரித்து விடுங்கள் ‘ ( Burn the Boat ) என்று ஒரு ஆங்கிலக் கதை உண்டு . ஒரு தளபதி தன் போர் வீரர்களை அழைத்துக் கொண்டு பல படகுகளில் மிகப் பெரிய கடலைக் கடந்து அழகிய தீவு ஒன்றுக்கு பயணமானான் . அந்தத் தீவை அடைந்தவுடன் அவன் தனது படை வீரர்களை அழைத்து படகுகளை எரித்துவிட உத்தரவிட்டான்.
அதைக்கேட்டு படை வீரர்கள் திடுக்கிட்டுப் போனாலும், தளபதியின் உத்தரவாயிற்றே ! மறுக்க முடியுமா என்று படகைக் கொளுத்தி விட்டார்கள். படகு முழுக்க எரிந்தபின் தளபதி சொன்னான் . “ இப்போது நமக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, நாம் இந்தத் தீவு வீரர்களோடு போரிட்டு அவர்களை வெற்றிகொள்வது. இல்லையேல் நாம் செத்து மடிவது “ என்றான். வெற்றி பெறுதலே ஒரே இலக்கு என்பதால், தீவிரமாகப் போராடி அந்தப் படை வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்தது.
ஒரு வேலையை முழுக் கவனத்தோடும் , ஈடுபாட்டோடும் , தீவிரத்தோடும் செய்கின்றபோது எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும் . ஒரு வேலையை முழு நேரமாகச் செய்யாமல், பகுதி நேரமாகச் செய்வதோ அல்லது ஓய்வு நேரத்தில் செய்வதோ கதைக்கு உதவாது.
தொடக்கத்தில் சில மாதங்கள் வேண்டுமானால் பகுதி நேரமாகச் செய்யலாம்.
ஆனால், எவ்வளவு வேகமாக அதை முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொள்கிறோமோ அவ்வளவு வேகமாக வெற்றி பெற முடியும்.
அதேசமயம், பகுதி நேரமாக செய்வதற்கென்றே சில தொழில்கள் உள்ளன. பால் விற்பனை, நாளிதழ் விற்பனை, டியூஷன் எடுத்தல், ட்ரான்ஸ்லேஷன் பணிகள் என்பன நாள் முழுக்க வேலை வைக்காத தொழில்கள். ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டே இது போன்ற தொழில்களில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உடனடியாக நீங்கள் முழு நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் காலப்போக்கில் அதே வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அதை முழு நேரமாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, பால் விற்பனை செய்பவர் பிற நேரங்களில் பால் சார்ந்த இதர பொருட்களை விற்கலாம்… வீட்டுக்குத் தேவைப்படும் மினரல் வாட்டர் சப்ளை, மளிகைப் பொருள் விற்பனை போன்றவற்றை மேற்கொள்ளலாம். வீடுதேடி வரும் பொருட்களுக்கு நம்மூரில் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.