இலக்கை அடைவதற்கான வரைபடத்தை நம் மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டால் வெற்றி விரைவாகக் கைகூடும். எப்படி வீடு கட்டுவதற்கு முன் ஒரு ஆர்க்கிடெக்ட் வரைபடத்தைத் தயாரிக்கிறாரோ, அதுபோல் மனதிற்குள் நமக்கு எந்த மாதிரியான வெற்றி தேவை என்கிற வரைபடமும் இருக்க வேண்டும்.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நெகர் (Amold schwarzenegger) ஆரம்ப காலத்தில் திரையுலக நட்சத்திரமாக அறியப்படவில்லை. அவர் உலகின் நம்பர் ஒன் பாடி பில்டராகத்தான் (ஆணழகன்) அறியப்பட்டார். 1976 ஆம் ஆண்டு, அவரைச் சந்தித்த ஒரு பத்திரிகையாளர். அவருடைய அடுத்த இலக்கு குறித்து கேட்டபோது, ‘நான் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராகப் போகிறேன்” என்றார் அர்னால்ட் நடிப்பு சார்ந்த எந்த முன் அனுபவமும் இல்லாத ஆஸ்திரிய நாட்டு உச்சரிப்போடு, சுமாரான ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஆணழகன், எப்படி ஹாலிவுட்டில் நுழைய முடியும் என்று ஆச்சரியப்பட்டு, அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டார் பத்திரிகையாளர். அதற்கு அர்னால்ட் “நான் எப்படி உலகின் நம்பர் ஒன் பாடி பில்டராக ஆனேனோ, அதுபோல் இதையும் என்னால் சாதிக்க முடியும். எப்படி தெரியுமா? நான் எனது இலக்கை நிர்ணயித்துவிட்டு, என் மனதிற்குள் அந்த இலக்கை அடைந்து விட்டதாகவே எண்ணி, அப்படியே வாழ ஆரம்பித்து விடுவேன்” என்றார். இந்தப் பதில் குழந்தைத்தனமாக நமக்குத் தெரிந்தாலும் கூட, அர்னால்டின் வாழ்க்கையில் உண்மையாகவே இது நிகழ்ந்தது. அவர் இறுதியில் நம்பர் ஒன் ஹாலிவுட் நடிகரானார். ஆம்! உங்களால் உங்கள் இலக்கை வரைபடமாக மனதிற்குள் பார்க்க முடியுமானால் அதை நிச்சயம் அடையவும் முடியும். நீங்கள் வெளியில் செல்லும் போது, காரில் ஏறி அமர்ந்து, செல்லப் போகும் இடத்தை டிரைவரிடம் சொன்னால், அவர் எப்படி அந்த இடத்தைக் கண்டறிந்து உங்களைக் கொண்டுபோய் இறக்கிவிடுவாரோ. அதுபோல் மனதிற்கும் நாம் வரைபடத்தை கொடுத்துவிட்டால் அதுவே பாதைகளைத் தீர்மானித்து நம்மை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker