எந்தச் செலவுக்கு நாம் முன்னுரிமை தரவேண்டும் என்பதைப் பட்டியலிட்டு பின்பு முன்னுரிமையின் அடிப்படையில் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பாக செலவுக்கும், முதலீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
செலவுகளைப் பொறுத்தவரை “நிலையான செலவுகள் மற்றும் மாறக்கூடிய செலவுகள்” என்று இரண்டு வகை உண்டு. தொழில் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் ஆகக் கூடிய செலவுகள் நிலையானவை. இவற்றை ரன்னிங் எக்ஸ்பென்ஸ் என்பார்கள். அதாவது, ஒரு அலுவலகத்தை நமக்காக அமைத்து விட்டாலே, அங்கிருந்து மீட்டர் ஒட ஆரம்பித்துவிடும். மாதம் முதல் தேதி ஆனால் சில செலவுகள் கைகட்டி காத்து நிற்கும்.
அலுவலக வாடகை, ஊழியர் சம்பளம், கடனுக்கான வட்டி, மின் கட்டணம், மாதாந்திரத் தவணை போன்றவைத்தான் அந்தச் செலவினங்கள். நீங்கள் தொழிற்சாலையையோ, அலுவலகத்தையோ பூட்டி விட்டு ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சென்றாலும் கூட அப்போதும் இந்தச் செலவுகளுக்கு தொகை ஒதுக்கியே ஆகவேண்டும்.
“மாறக்கூடிய செலவுகள்” என்பது அலுவலகம் இயங்கினால் மட்டுமே ஏற்படக்கூடிய செலவுகள் ஆகும். எடுத்துக்காட்டாக, உற்பத்திக்குக் தேவைப்படும் கச்சாப் பொருட்கள், சரக்கு ஏற்றிச் செல்லும் வண்டி வாடகை, கூரியர்/அஞ்சல் செலவு, டாக்சி வாடகை, பயணச் செலவு, தங்கும் செலவு, விளம்பரக் கட்டணங்கள் போன்றவற்றை இந்த இனத்தில் சேர்க்கலாம்.
இவை இரண்டும் கலந்த சில செலவுகள் கூட உண்டு.
செலவின் பாதிப் பகுதி நிலையானதாகவும், மீதிப் பகுதி மாறக் கூடியதாகவும் இருக்கும். தொலைபேசிக் கட்டணம் மாதத்தவணை கொண்டதாக இருந்தாலும், வாடகை நிலையானதாகவும், அதன் பயன்பாட்டினால் வரும் செலவு மாறக்கூடியதாகவும் இருக்கும். மாதாந்திர வாடகை ரூ 250 நிலையான செலவாகவும், பயன்பாட்டிற்கு ஆகும் ரூ 500 மாற்றக்கூடிய செலவாகவும் இருக்கும். இல்லையா…? மின்சாரக் கட்டணம் கூட இந்த ரகம் தான்.
இந்தச் செலவுகளில் நிலையான செலவு தோராயமாக 30% நிலையான மற்றும் மாற்றக்கூடிய செலவு தோராயமாக 10% மாறக் கூடிய செலவு – தோராயமாக 60% என்றும் இருந்தால் அந்நிறுவனம் தன் நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக மேற்கொள்வதாக அர்த்தம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள். எல்லாத் துறைகளுக்கும் இந்தக் கணக்கு பொருந்தாது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
நிலையான செலவுகளைக் குறைக்கும் போது, லாபம் அதிகம் வரும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா…?
ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இதோ ஒரு உதாரணம் ஒரு டிராவல்ஸ் நிறுவன அதிபர், தமது டிரைவர்களுக்கு சம்பளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் வழங்குகிறார்.
ஆனால், சில மாதங்கள் வருமானம் இல்லாமல் சிரமப்படும் போது அவரால் நிலையான செலவை ஈடுகட்ட முடியவில்லை. எனவே, வாகன ஓட்டிகளிடம் பேசி சம்பளத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தார். சம்பளத்தையே இரண்டு பகுதிகளாக மாற்றினார்.
அதாவது டிரைவரின் சம்பளத்தைக் குறைத்து, (தோராயமாக ரூ.5000), வாகனம் ஓட, ஓட கிலோ மீட்டருக்கு இவ்வளவு என இன்சென்ட்டிவ் தொகை தருவதாகவும் கூறினார். இதனால், உங்கள் வருமானம் உயரும் என்று கவர்ச்சிகரமான திட்டம் போல கூறினார். அதாவது, ரூ.6,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரு டிரைவர் இதனால் வாகனம் அதிகம் ஓடும் மதங்களில் கூடுதலாக இன்சென்ட்டிவ் பெற்று ரூபாய் 8 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் கூட ஈட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் வாகனம் அவ்வளவாக ஓடாத மாதங்களில் ரூ.7,000 வரையே மாத வருவாய் பெறுவார்.
இதை ஊழியர் சம்பளம் மட்டும் அல்லாது இடத்தில் வாடகை விஷயத்திலும் சோதித்துப் பார்க்க முடியும்.
பொதுவாக எந்த ஒரு தொழிலிலும் “நிலையான செலவுகளைக்” குறைத்துக் கொள்வதன் மூலம் நீண்ட காலத்துக்கு நிலையாக நிலைத்து நிற்கமுடியும். சரி… இந்த உத்தி எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்துமா? பொதுவாக சிறிய நிறுவனங்களுக்கும், நடுத்தர நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒவ்வொரு செலவையும் அணு அணுவாக கவனித்துக் கொணடிருக்க முடியாத பட்சத்தில், இந்த உத்தி பொருந்தாது. அங்கு செலவின் தன்மையை அணுகும் முறையே முற்றிலும் மாறுபடும்.
அங்கு மாற்றக்கூடிய செலவுகளைக் குறைத்து நிலையான செலவுகளை அதிகரித்துக் கொள்வதே வழக்கம். காரணம் ஆயிரக்கணக்கான செலவுகள் ஏற்படுகின்றபோது ஒவ்வொரு செலவையும் கூர்ந்து பார்ப்பது சிரமம் என்பதாலும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் தேவை என்பதைத் திட்டமிடுவது கடினம் என்பதாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த உத்தியைக் கையாளுகின்றன.
எடுத்துக்காட்டாக அதிகாரிகள் வெளியூர் செல்கிற போது ஏற்படும் தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு போன்றவற்றை அவர்கள் செலவழிக்கும் தொகையின் அடிப்படையில் வழங்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை (நிலையான செலவாக) நிர்ணயித்து விடுவது வழக்கம். அதாவது ஒரு நாள் சாப்பாட்டிற்கு ரூ.500, வெளியூர் பயண அலவன்ஸ் நாள் ஒன்றுக்கு ரூ.250 என நிர்ணயித்து விடுவர். இது போல் அவ்வப்போது ஊழியர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை திருப்பிக் கொடுக்காமல் ஆண்டுதோறும் மருத்துவக் காப்பீடை எடுத்துக் கொடுப்பது, தினசரி ஏற்படும் பயணச் செலவுக்கு மாற்றாக பாஸ் எடுத்துக் கொடுப்பது, மாதந்தோறும் வாகனத்தின் எரிபொருள் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பது… இப்படி “மாறக்கூடிய செலவுகளை” எல்லாம் “நிலையான செலவு”களாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மாற்றுகின்றன.
நீங்கள் பொதுவில் உத்தியை இப்படி வகுத்துக் கொள்ளலாம். கண்காணிக்கக் கூடியவற்றை “மாற்றக்கூடிய செலவுகளாகவும்” கண்காணிக்க முடியாதவற்றை “நிலையான செலவுகளாகவும்” வைத்துக் கொள்ளலாம்.
—– இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu